Monday, June 10, 2013

உதிர்ந்தும் உதிராத கனவு

(மே 16, 2013)

நேற்று அம்மாவோடு நானும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது விருப்பொன்றை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஈழத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலங்களில் கொட்டகை(குடில்) அமைத்து அங்கே வந்து யாரும் தங்கவும், வாசிக்கவும் கூடிய வசதிகளைச் செய்வதென்பது பற்றி. இது நான் Occupy Toronto & Occupy London போன்ற இடங்களை நேரில் பார்த்தபோது எனக்குள் முளைத்தெழும்பிய ஒரு கனவென்றும் சொல்லலாம். அத்தோடு எங்களின் நண்பரொருவர் மெக்ஸிக்கோவில் இதைவிட இன்னும் பெருங்கனவுத்திட்டத்தை முன்வைத்து அதை ஒரளவு யதார்த்தத்தில் சாத்தியமாக்கிக் காட்டியுமிருந்தார். அதாவது மெக்ஸிக்கோவில் நிலம் வாங்கி வீடமைத்து அதில் தங்கியிருப்பவர்களுக்கான எல்லாத் தேவைகளையும் (தோட்டம் செய்து/ கால்நடை வளர்த்து) அந்நிலத்தைக் கொண்டே சாத்தியமாக்குவது. இதையொத்த -பண்ணைகளில் சென்று சம்பளமில்லாது வேலை செய்து தத்தமது உணவுத் தேவைகளைத் தீர்ப்பது-என்பது நீண்டகாலமாய் நடைமுறையில் இருக்கின்றதென்றாலும், நண்பரின் மெக்ஸிக்கோ கனவு சற்று வித்தியாசமானது. அந்நிலத்தில்/வீட்டில் எவரும் தங்கியிருக்கலாம், விரும்பினால் வேலை செய்யலாம், வேலை செய்யாமல் கூட இருக்கலாம். எவரையும் எவரும் நிர்ப்பந்திக்கக்கூடாது. அதாவது எவ்வித நிர்ப்பந்தமில்லாது தமக்கு விரும்பியதை அவரவர் செய்யலாம் என்பதே இதன் முக்கிய உட்கிடை. நண்பர்/கள் இதற்கு 300 பேரிடம் தலா 100 டொலர்கள் அன்பளிப்பாய்க் கேட்டு இத்திட்டத்தை முன்வைத்தபோது யதார்த்ததை நெருங்காத ஓர் கனவுத்திட்டமென்றே நம்மில் பலர் நம்பியிருந்தோம்/சந்தேகித்திருந்தோம். எனினும் அதைத்தாண்டி என் பங்களிப்பை - சற்றுத் தயக்கத்தோடுதான்- செய்திருந்தேன். இப்போது நிலம் வாங்கப்பட்டு வீடு கட்டப்பட்டு கனவுத் திட்டம் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கின்றதென அறிகிறேன். எவ்வாறு ஒரு பொழுதில் சாத்தியமேயில்லையென நினைத்த கனவைச் சாத்தியமாக்குகின்றார்கள் என்று பார்ப்பதற்காகவேனும் நான் ஓருமுறை மெக்ஸிக்கோவிற்கு கட்டாயம் போகவேண்டும்.

இதன் நீட்சியிலே, பயன்படுத்தப்படாத காணிகளில் இவ்வாறான கொட்டகைகளை அமைத்து ஈழத்திற்கு ஏதாவது வேலைத்திட்டங்களோடு பயணிக்கும் நண்பர்கள் தங்கவும், உள்ளூரில் இருப்பவர்கள் பொழுதைக் கழிக்கவும் நூற்களை வாசிக்கவும் விவாதிக்கவும் செய்வதற்கான ஒரு திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமென கனவு கண்டு கொண்டிருக்கின்றேன். பல்வேறு நண்பர்கள் பயன்படுத்தாத தமது சொந்த நிலங்கள் அவரவர் ஊர்களில் இருக்கின்றதெனவும் சொல்லி இன்னும் ஆசையை வளர்த்துவிட்டபடி இருக்கின்றார்கள். ஈழத்தில் அநேக தமிழ்ப்பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கப்பட்டிருக்கும்போது இது சாத்தியமா என்கின்ற சந்தேகங்களிற்கும், நான் வளர்ந்த பிரதேசம் இராணுவம் சுவீகரிக்கவுள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வரப்போகின்றதா இல்லையா என்பதுகூட தெளிவாய்த் தெரியாதபோதும், ஒரு சிறுகாலடியென்றாலும் முன்னே வைக்க விரும்புகின்ற ஓர் எத்தனிப்பே இது.

என் திட்டத்தைக் கேட்ட உந்துதலிலோ என்னவோ, அம்மா வளர்ந்த நிலத்தின் வரைபடத்தை மாதிரியாக அண்ணா வரையத்தொடங்கினார். அம்மாவிற்கு ஐந்து சகோதரர்கள். யார் யாருக்கு நிலத்தில் எந்தப் பகுதி உரித்தென குறிக்கத் தொடங்கினோம். அம்மாவின் ஊர் கீரிமலைக்கு அருகிலும் முக்கிய தெருவின் ஓரத்தில் இருப்பதாலும், இந்த நிலத்தில் கொட்டகை அமைத்தால் மேலதிக வசதியாய் குளிக்கப்போகின்றவர்களுக்கு உதவியாய் இருக்குமென எனக்குள் இன்னொரு திட்டமும் ஓடியது. அம்மா இருந்த இடத்தை நாங்கள் வரையத்தொடங்கியதும், பல்வேறு மனிதர்கள்/சம்பவங்கள் அம்மாவிடமிருந்து சிறகு வளர்ந்து பறக்கத்தொடங்கின/ர். எனக்கு அந்த ஊர் மற்றும் அயலவர்கள் அவ்வளவு பரீட்சயமில்லையென்றாலும் அம்மாவும் அண்ணாவும் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த வாழ்வும், மனிதர்களும் இன்று சிதறிப்போன துயரை, 'எல்லாம் இந்தத் தமிழரசுக் கட்சியினால் வந்ததென...' ஒரு பெருமூச்சுடன் அண்ணா நிறுத்திக்கொண்டார். எங்களுக்கிடையில் மவுனம் இன்னொரு மனிதராய் வந்து அமர்ந்து உரையாடத் தொடங்கியிருந்தது.

சரி, இருந்த நிலம் யார் யாருக்கு உரித்துடையதென கட்டம் கட்டிக்கொண்டு வந்தபோது, 'எங்கே உங்களுக்கு உரித்தான நிலம்?' என்று அம்மாவிடம் கேட்டேன். 'எனக்கு ஒன்றும் தரவில்லை, எதுவும் இதில் சொந்தமில்லை' என்று சிரித்துக்கொண்டு சொன்னார் அம்மா.

அட, கீரிமலைக்குக் கிட்டவாய் கொட்டகை போடும் ஓரு கனவு இவ்வளவு எளிதாய் உதிர்ந்துபோயிற்றென எனக்கு முதலில் சலிப்பு வந்தது.. அதனாலென்ன, எதையும் சொந்தம் கொண்டாடாமல் எல்லோருக்கும் எல்லாமே சொந்தமென்று வாழும் வாழ்வென்பதுதானே எம்மைப் போன்ற பலரின் பெருங்கனவு. அம்மா தெரிந்தோ தெரியாமலே அந்தக் கனவின் முதலடியைத் தன் குடும்பத்திற்குள் சாத்தியமாக்கியிருக்கிறார் என நினைக்கின்றேன். அந்தவகையில் இதுவும் மகிழ்ச்சியான ஓரு விடயமே.

No comments:

Post a Comment