Thursday, June 13, 2013

கோணங்கியை (அரையும் குறையுமாய்) பின்னிரவில் வாசித்தல்

சில படைப்பாளிகளை விரிவாக வாசிக்காது, சும்மா சந்தித்துப் பேசும்போது சொல்லப்படும் சில வரிகளை மட்டும் கொண்டு அந்தப்படைப்பாளிகள் பலரால் மதிப்பிடப்படுகிறார்கள். ஆழமான வாசிப்பில்லாது இவ்வாறு 'கதை'களைக் காவிக்கொண்டு திரிவது தமிழ்ச்சூழலின் அவலம் என யாரோ எழுதியது நினைவிலுண்டு. கோணங்கியின் 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி...'  தவறவிட்ட கதைகளை மீண்டும் வாசித்தபோது கோணங்கியும் அவ்வாறு அரைகுறையான பேச்சுக்காவிகளால் தவறாக மதிப்பிடப்படுகின்றார் எனவே தோன்றுகின்றது. இந்த தொகுப்பிலிருக்கும் 70 கதைகளில் ஆகக்குறைந்தது 45 கதைகளை மிக எளிதாக வாசித்துவிடமுடியும். மிகுதிக்கதைகளுக்கு வேண்டுமென்றால் 'புரியாத மொழியில் எழுதுகிறார்' என்ற விமர்சனத்தை ஒருபொருட்டாகக் கொள்ளலாம். ஆனால் கோணங்கியின் கதைகளின் மொழி எவ்வாறு மாற்றமடைந்து போகிறது என்பதற்கு இந்நூலை முன்வைத்து நல்லதொரு விமர்சனத்தை ஒருவர் வைக்கலாம் (நான் அவரின் நாவல்களை இங்கே சேர்க்கவில்லை).

கதைகளிலும் கவிதைகளிலும் என்னை ஒருகாலத்தில் அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் ரமேஷ்-பிரேம். ஆனால் இன்றும் என்னால் அவர்களின் தொடக்ககால படைப்பான 'அதீதனின் இதிகாசத்தை' முழுமையாக வாசிக்க முடியாமற்தானிருக்கிறது. ஐந்தாறு பக்கங்களை வாசித்தவுடனேயே எங்கையோ தொலைந்துவிடுபவனாக ஆகிவிடுகின்றேன். ஆக, ரமேஷ்-பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களே எனக்கு விளங்கவில்லை என நினைத்து விலத்தியிருந்தால் பிறகு அவர்களை எனக்கு நெருக்கமானவர்களாக  என்றுமே அடையாளங் கண்டிருக்க முடியாது. அது போல 'காவப்படும் கதைகளை' மட்டும் கவனத்தில் எடுத்திருந்தால் நான் கோணங்கியையும் தவறவிட்டிருப்பேன். 'மதினிமார்களின் கதை'யையும், 'கொல்லனின் ஆறு பெண்மக்களையும்' , பொம்மைகள் உடைபடும் நகரத்தையும்' தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்தவை அவையல்ல, பாழியும் பிதிராவும்தான்.  இந்நாவல்களின் பெயர்கள் வசீகரித்த அளவுக்கு, அவற்றின் உள்ளடக்கம் இப்போதைக்கு தொடக்கூடாதென்றளவுக்கு மிகவும் பயமுறுத்தியிருக்கின்றன. அதேவேளை அது எழுதப்பட்டிருக்கும் மொழியினோடு எனக்கு இன்னும் பரிட்சயம் வரவில்லை என்று நினைத்திருக்கின்றேனோ தவிர எழுதிய ஆசிரியரை 'இப்படி எழுதியிருக்கின்றாயே, நாசமாகப்போக' எனச் சாபம் கொடுக்கவில்லை.

'சொல் என்றொரு சொல்'லும் முதல் சிலமுறை வாசித்தபோது உள்ளிழுக்காதபோதும், சட்டென்று ஒருமுறை இழை இழையாகப் பிரிந்து விளங்க முழு மூச்சாக அதை வாசித்து முடித்திருந்தேன். மேலும் எல்லாமே எப்போதும் விளங்கவேண்டும் என்ற அவசியமிருக்கா என்ன?  நகுலனின் எழுத்துக்களை சுய அலட்டல்கள், உள்ளோளி தரிசனங்கள் இல்லையென்பவர்கள் ரொபர்த்தோ போலானோவின் எழுத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என யோசித்துப் பார்க்கின்றேன். உள்மனத் தரிசனங்களுக்கு இலக்கியத்தில் ஒரிடமிருப்பதுபோல சுயஅலட்டல்களுக்கும் ஓர் இடம் கொடுத்தால் என்னதான் குறைந்துவிடப்போகின்றது?  ஒற்றைத்தன்மையான, இறுக்கமான, தமக்கான பார்வையினூடாகப் பார்ப்பது மட்டுமே நல்ல இலக்கியங்கள் என்று உரத்துக் கூறுபவர்களை, 'நீங்கள் கூறுவதற்கும் ஓரிடம் உண்டு, ஆனால் அந்த இடம் மற்ற வகைமைகளை உதாசீனப்படுத்துவதால் வருவதால் அல்ல' என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டிக் கொள்வோம்.  கதைகளில் ஒரு தெளிவான 'கதை' இருக்கவேண்டும், முடியும்போது நெற்றிப்பொட்டில் அடித்தால்போல ஒரு முடிவு இருக்கவேண்டும் என்றெல்லாம் உறுதியாக இருப்பவர்களோடு நாம் நிதானித்து நின்று பதில் சொல்லவேண்டியதுமில்லை (புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் tragedy  பற்றி மெளனி எழுதியதை இங்கே நினைவுபடுத்தியும் பார்க்கலாம்).

ஆக என்னுடைய வாசிப்பை வைத்துச் சொல்வதென்றால், கோணங்கியைப் பதற்றமின்றி வாசிக்க அவருடைய சிறுகதைகளிலிருந்து தொடங்கலாம். சலூன் நாற்காலியில் சுழன்றபடி இன்னுஞ் சிறப்பான தேர்வாக இருக்கும், எப்படி அவர் இன்று அதிகம் விமர்சிக்கபப்டுகின்ற 'புரியாத மொழியில்' எழுதுகிறார் என்ற புள்ளிக்கு கோணங்கி வந்தடைகின்றார் என்பதையும் கூட அலசி ஆராய்ந்து பார்க்க இத்தொகுப்பு உதவக்கூடும். 'மஞ்சட்பூத் தெரு' வில ஜி.நாகராஜனும், 'ஆறில்' புதுமைப்பித்தனும்,இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறதில்' நகுலனும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அண்மையில்  'அறம்' பாடி உன்னதமாக்கப்பட்ட சில எழுத்தாள ஆளுமைகள் (ஆவிகள் எனச்சொல்வதும் சிலவேளைகளில் பொருந்தும்) போல மீள் உருவாக்கம் கொள்ளவில்லை. அவர்களின் பலங்களோடும் பலவீனங்களோடும் கோணங்கியிடமிருந்து வெளிப்படுகின்றார்கள். அதுதான் முக்கியமானது, இது படைப்புக்கான வெளியே தவிர,  இன்னொரு அ'ங்காடித்தெரு' போல சோகம் மேல் சோகமாய், தியாகம் மேல் தியாகமாய், அறம் மேல் அறமாய்.... போதும் போதும் என்றளவிற்கு ஒரு திரைக்கதைக்குரிய கதைகளாக இருக்கமுடியாது. எனெனில் வாழ்க்கை இப்படியென்றுமே அதீதமாய் இருப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இறுதியில் விமர்சனமாய் கோணங்கியின் படைப்பில் தெரியும் ஒருவிடயத்தையும் கூறியாக வேண்டியிருக்கிறது. நான் வாசித்தவரையில் அசோகமித்ரனின் படைப்புக்களில் கூட அவ்வளவு துருத்திக்கொள்ளாத சுயசாதி அபிமானம் கோணங்கியின் படைப்புக்களில் பிறீட்டு வெளிப்படுகிறது . ஒருவர் தன் சுயசாதி அடையாளத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லைத்தான். ஆனால் தன் சுயசாதி ஓர் ஒடுக்குகின்ற சாதியாக இருக்கின்றபோது அங்கே பெருமிதம் பேசுவதை விட, தன் சாதியின் பெயரால் பிறரை ஒடுக்குவதை பதிவுசெய்வதை.., தன் சுயசாதியைக் கிண்டல் செய்வதையும் முக்கியமாய்க் கொள்ளவேண்டும்.  அந்த விடயம் கோணங்கியின் கதைகளில் காணாமல் போயிருப்பது என்னளவில் ஏமாற்றமே. சுந்தரராமசாமி நாசூக்காய் மறைத்ததும், அசோகமித்ரன் கண்டும் காணாததுமாய் விட்டதும், ஆனால் ஆதவன் நக்கல் செய்ததும், கிருத்திகா வானேஸ்வரத்திலும், கரிச்சான் குஞ்சு பசித்த மானுடத்தில் தாம் வந்த சாதிகளைக் கிழிகிழியென்று கிழித்துமிருக்கின்றார்கள் - ஒரு நினைவுக்கு.

'அடே...அப்பிச்சி....உன் தாத்தனுக்காக இருக்கவேண்டாமய்யா... நீ போய்யா, நல்லா இருப்ப, இன்னாரு பேரன். சுப்பையாத் தேவன் பேரன்னு பேரெடுத்துப்பாப் போதுமுடா. நாங்க மண்ணுக்குள்ள போறாமுடா' என 'அப்பாவின் குகையில் இருக்கிறேனில்' சொல்வதை ஓர் உணர்ச்சித்தளத்தில் வைத்துப் பார்க்காலாந்தான். ஆனால் அதற்கப்பால் தலைமுறைக்குள்ளால் தன் சுயசாதிப் பெருமிதங்களைக் கடத்தும் சாமர்த்தியங்கள் இதில் இருக்கிறதெனவும் வாசிக்கலாம். 'தேவர்கள் நிறையக்கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். ஆகவே தான் கோணங்கி 'உங்கள் உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை'யும் தேவர் சாதிச் சிறுத்தைதானோ என சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது என அவருக்குச் சொல்லவும் வேண்டியிருக்கிறது. இதற்கப்பாலும் 'சிறுத்தையின் உடல் புள்ளிகள் பிரபஞ்சத்தின் ஆயிரம் கண்களாகத் திறந்து வைலட் கற்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் தீரவே தீராமல் ' (உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை) போர்ஹேயின் புலி போலும் எனச் சமாதானம் செய்துகொள்ள முயல்கிறேன், என்றாலும்.....!

ஒக்ரோபர் 01, 1.36 a.m.
(not edited yet)

LABYRINTH BY ROBERTO BOLAÑO

(Jan 20 ,2012)

ஒரு புகைப்படத்திலிருந்து கூட எவ்வளவு புதிராய்/புதிதாய்க் கதை களை அவிழ்க்க முடியுமென்பதற்கு ரொபர்த்தோ போலானோவின் இந்தக் கதை உதாரணம். தொடக்கத்தில் குறிப்பிடப்படும் பெயர்களைக் கொஞ்சம் நினைவில் வைத்துவிட்டால் தொடர்ந்து வாசிக்க சுவாரசியமாக இருக்கும். இதிலும் ரொபர்த்தோ ஒரு பாத்திரமாய் இருக்கிறார் Z ஆகவும் மத்திய அமெரிக்கனாகவும். ஒரு மெல்லிய நகைச்சுவையை கதையில் இழையவிட்டு ரொபர்த்தோ எழுதியது இன்னும் சிறப்பு

Hemingway & Gellhorn

(Jun 24, 2012)

இரண்டு ஆளுமைகளின் வாழ்வு இடைவெட்டும் காலத்தைப் பற்றிய பதிவு. அவர்களில் காதல், காமம், பிரிவு, ஈகோ இவற்றைத் தாண்டி தாம் விரும்பியவற்றைத் தேர்ந்தெடுக்கும் பிடிவாதம். ஒரே துறையில் இருக்கும் இணைகளில் வாழ்வு நாம் நினைப்பது போல அவ்வளவு மகிழ்ச்சிகரமாய் நீண்டகாலப்போக்கில் அமையாது என்பதற்கு இவர்களின் வாழ்வு ஓர் உதாரணம். ஹெமிங்வேயைப் போல ஹெல்ஹோனும் இறுதியில் தற்கொலையையே தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

'With you, Without You'

(May 04, 2013)

'With you, Without You' என்னவொரு திரைப்படம். படம் மட்டுமில்லை படத்தின் பிறகான பிரசன்னாவோடான உரையாடலும் இன்னும் திரைப்படத்தோடு ஒன்றிக்க வைத்தது. கடந்தகால வன்முறையின் வரலாற்றை மறந்து (அல்லது உதறித்தள்ளி விட்டு) இனங்களுக்கிடையிலான மேலோட்டமான மீளிணக்கம் எப்படி தோல்வியுறும் என்பதை தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவின் மூலம் மிக ஆழமாக பிரசன்னா இத்திரைப்படத்தில் தந்திருக்கின்றார். மிகக் குறைந்த பாத்திரங்களோடும், ஒரு குறுகிய பின்னணி நிலவியலோடும், மிகச் சொற்ப உரையாடல்களோடும் எப்படி மனதைப் பிசையுமொரு படத்தைத் தரலாம் என்பதற்கு இதொரு இன்னொரு உதாரணம். சிக்கலான படிமங்களோடும், எல்லாவற்றையும் 'சொல்லிவிடும்' எத்தனிப்புக்களுமின்றி பல்வேறு இடங்களில் விடப்படுகின்ற வெளியிலிருந்தும் பார்வையாளர் தமக்கான ஒரு பிரதியை(படைப்பை) உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கின்றது என்பது என்னளவில் முக்கியமானது. எவற்றிலிருந்து நாம் தப்பிவிடமுடியும் ஆனால் நமது மனச்சாட்சிகளிடமிருந்து என்றைக்குமாய்த் தப்பிவிடமுடியாது என்பதை ஒரு பெரும்பான்மை இனத்திடமிருந்து வரும் தெளிவான குரல் கவனிக்கத்தக்கது. சிலரின் படைப்புகளைப் பார்த்து/வாசித்துவிட்டு அவர்களோடு உரையாடினால், இதைவிட அவர்களைச் சந்திக்காது விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிப்போம். எனக்கு இந்தப் படத்தைப்போலவே பிரசன்னாவோடு நிகழ்த்திய உரையாடலும் அதிக நெருக்கத்தைத் தந்தது. இன்று அறியப்பட்ட நெறியாள்கையாளராக இருந்தாலும், நாம் சுட்டும் தவறுகள்(விமர்சனம்) போன்றவற்றை மிகப் பணிவாகக் கேட்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பிரசன்னாவில் பிடித்த இன்னொரு விடயம். இவர்களும் இவர்களின் படைப்புக்களுமே இன்னும் தாம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய வன்முறையை அறியாத (அல்லது அறிய விரும்பாத) பெரும்பான்மையினத்தவரின் மனச்சாட்சிகளை அசைக்க நம் முன் வைக்கப்படும் நம்பிக்கைக் கீற்றுக்கள் என நம்புகிறேன்.
"With you Without you" - What a movie. I am not only very impressed with the movie but also the conversation with the director. This movie again reminds us that there is no real reconciliation without knowing the history of violence between two ethnic communities in Sri Lanka. This movie have lots of metaphors and as well as leave enough space to audience to think beyond the movie. It is very hard to create a movie with handful of characters and a fixed small landscape, but this movie also impress us with less dialogues. I am also very moved with the conservation with Prasanna. Yet he is known director everywhere, he is very humble to hear audience's point of views. Thanks Prasanna Vithanage, Though there is long way to travel to resolve our ethnic conflicts, but you give a ray of hope that there are still few sinhalese people worrying (or in other words feeling guilty) of what happened to Tamil people in Sri Lanka

என்.சண்முகதாசன்

(May 27, 2013)

"இலண்டனில் மூன்று வாரம் நான் கழித்தேன். அக்காலத்தில் மார்க்சிய-லெனியவாதிகள் என்று அழைத்துக்கொண்டு ஒரு பெரும் கூட இலங்கையர்கள் அங்கிருந்தார்கள். அவர்களுடன் நான் பல கலந்துரையாடல்களை நடத்தினேன். 50ம் ஆண்டுகளில் இலண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் குழுவின் உறுப்பினர்களைப் போலவே இவர்களில் பலர் வசதியான குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஆகவே இவர்களில் ஒருவர்தானும் இலங்கை திரும்பியபோது புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. உண்மையில் இவர்களில் சிலர் இலங்கை திரும்பியபோது தனிப்பட்டரீதியில் கூட என்னுடன் தொடர்பு வைக்கவில்லை. நான் இலண்டனை விட்டுப் புறப்பட்டபின் இவர்களில் பலருக்கு எழுதினேன். அவர்கள் மார்க்சிய-லெனினியவாதிகள் ஆகியதை ஒட்டி எனது மகிழ்ச்சியை நான் தெரிவித்தேன். வெளிநாட்டில் ஒரு கம்யூனிஸ்டஆக இருப்பது இலேசானது. ஆனால் ஒருவர் நாடு திரும்பி குடும்பத்தினதும், அரசினதும் பிற்போக்கு செல்வாக்குக்கு ஆளாகும்போதுதான் உண்மையான சோதனை ஏற்படுகிறது. இந்தச் சோதனையில் அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்றும் நான் குறிப்பிட்டேன். ஆனால் அவர்கள் அனைவரும் சோதனையில் தேறவில்லை என்பதை மனவருத்தத்துடன் குறிப்பிடுகிறேன். இது பொதுவாக வெளிநாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் அனைவருக்கும் பொருந்தும்." -என்.சண்முகதாசன், 1970களில் மீண்டும் இலண்டனுக்குப் போனபோது கண்டதை இவ்வாறு எழுதுகிறார் (நன்றி: ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்)

Tuesday, June 11, 2013

'காவல்கோட்டம்

(Apr  10, 2012)

'காவல்கோட்டம்' வாசித்து முடித்துவிட்டேன். வரலாற்று நாவல்கள் மீது அவ்வளவு ஈர்ப்பில்லாத என்னையே (சாண்டியனில் வரலாற்று நாவல்கள் ஒருகாலத்தில் பிடிக்கும், அதற்கு வேறு காரணம் உண்டு :) ) ஆயிரம் பக்கங்கள் வரை சுவாரசியமாக வாசிக்கச் செய்திருந்தது. இடதுசாரிகளுக்கு அவ்வளவு எளிதில் வாய்க்காத ஒரு மொழி வெங்கடேசனுக்கு வாய்த்திருப்பது இன்னொரு ஆச்சரியம். அரவான் படத்தை இந்நாவலோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்த்தது ஒரு சுவாரசியமான விளையாட்டுப் போலிருந்தது. அரவானின் இடைவேளைக்குப் பிறகான சின்னானின் கதை இந்நாவலிலிருந்து முற்றுமுழுதாக வேறுபட்டது என்பது வேறுவிடயம். வாசித்துவிட்டுக் கொடுத்தார்களோ இல்லை வாசிக்காமல் கொடுத்தார்களோஅல்லது நாகர்கோயிலில் இருந்து வந்த தொலைபேசியின் அழைப்பின் பிரகாரம் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் நாவலிற்கான இயல்விருதை காவல்கோட்டத்திகுக் கொடுத்தது பொருத்தமானதே.

The Panic Button

(May 08, 2012)

கும் காங்கேசனின் 'The Panic Button' நாவல் எனக்குப் பரிட்சயமான ஸ்காபரோ/டவுன்ரவுன் ரொறண்டோ/கென்னடி சப்வே போன்ற இடங்களில் நிகழ்வதால் வாசிக்கச் சுவாரசியமாக இருந்தது. ஆனால் கதையென்றால்... அம்மா இரண்டு ஆண்களைக் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். அப்பா விஸா பிரச்சினையால் 25 வருடங்களுக்குப் பின் இலங்கையிற்கு வருகின்றார் (அதுவரை அவர்கள் தந்தையை நேரில் காணவில்லை என்ற லொஜிக் ஒருபக்கம் இடிக்கிறது). தமையனுக்குத் திருமணம் நடக்கும்போது தம்பிக்கு ஒரு வெள்ளைப் பெண்ணோடு காதல் வருகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள், அப்பா- மகன் முரண்பாடுகள். வாசுகியின் நாவலைப் போலவே இங்கும் திருமணம் ஒருவகையான 'ஃபான்சியாக' விபரிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறையின் இளையவர்களின் வாழ்விலும் மரபுரீதியான திருமணம் முக்கியமாய் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் என்ன பிரச்சினையென்றால் அவர்கள் நினைப்பது/விபரிப்பது போல இத்தகை திருமணங்கள் இயல்பில் இல்லை என்பதுதான். இலக்கியச் சந்திப்பில் பேசிய இளைய தலைமுறையைச் சேர்ந்த சிவகாமிக்கு இருக்கும் அடையாளம் தேடல் குறித்த பிரக்ஞை கூட, கும் காங்கேயனுக்கு இல்லாது ஒரு மேற்கத்தைய பார்வையினூடு கதையைக் கொண்டு செல்லல் அலுப்புத் தரக்கூடியது மட்டும் அல்ல கவலை தருவதும் கூட. 

A Fine Balance

(May 21,2011)

அண்மையில் வாசித்த ஆங்கில நாவல்களில் A Fine Balance (by Rohinston Mistry) போல பாதித்த நாவல் எதுவுமேயில்லை. எழுத்துக்கள் குறுக்கப்பட்ட மலிவுப்பதிப்பிலே 600 பக்கங்கள் நீள்கின்ற இந்நாவலோடு கடந்த ஒருவாரமாக பயணித்துக் கொண்டிருந்தேன்.இந்தியாவில் 75ம் ஆண்டு எமர்ஜென்சிக் காலப் பகுதியில் நகரும் நாவல். கிராமப்புறங்களில் ஒடுக்கப்படும் தலித்துக்கள், நகரில் மிரட்டப்படும் மத்தியதர வர்க்கம்....என வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் நால்வரின் கதை அல்லது அவர்களின் வாழ்க்கை இடைவெட்டும் புள்ளிகள். வெவ்வேறு வாழ்க்கைச் சூழல் எப்படி இவர்களிடையே தொடக்கத்தில் வெறுப்பையும், புரிதலின்மையையும் உருவாக்கிறது என்பதிலிருந்து அவர்களுக்கிடையில் முகிழும் நட்பு  நீண்டு, முடிவில் ஒரு பெரும் சரிவை அபத்தத்தை நோக்கிப் போகின்றது. இந்திய அரசு /ஆதிக்கசாதி வன்முறையானது, தலித்துக்களிலிருந்து தொடங்கி, இறுதியில் இந்திராவின் கொலையில் சீக்கியர்களைத் தெருத்தெருவாக கொன்று குவிக்கின்றது வரை எப்படிப் பரவுகின்றது என்பதை அறிவதற்காகவேனும் இந்நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும். எமர்ஜென்சிக் காலத்தைப் பற்றிக் கொடூரங்களை, ஒரு கொலைகாரன் எப்படி பிறகு சாமியாராக மாறுகின்றான் என்பதை, சாதிக் கொடூரங்களுக்குத் தப்பி வரும் தலித்துக்கள் எப்படி பிச்சைக்காரர்களாக ஆக்கப்படுகின்றார்கள் என்பதை, எல்லா மனிதர்கள் மீதும் பேரன்பு வைக்கின்ற ஒருவன் எப்படி பிறர் மீது நிகழும் அநியாயங்களைப் பார்த்து பின்னாட்களில் தற்கொலை செய்கின்றான் என்பதை வாசிக்கும்போது பரவும் வெறுமையை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விடமுடியாது.

பா.திருச்செந்தாழை

(Jul 31, 2013)

பா.திருச்செந்தாழையின் 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்' மொழியைப் பல்வேறு வகையில் ப்ரீட்சித்துப் பார்க்கும் ஒரு தொகுப்பு. சிலர் வலிந்து மொழியை முறிப்பது போலவன்றி திருச்செந்தாழைக்கு அது இயல்பாய் வருவதைத் தொகுப்பின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை அவதானிக்க முடிகிறது. 'எழுத்தின் பீடைகுறித்து எப்பொழுதும் எச்சரித்தபடியிருக்கும் அம்மாவுக்கும் தம்பிகளுக்கும்...அன்பும் நன்றியும்' என முதற்பக்கத்திலிருந்தே ஏதோ ஒருவகையில் எனக்கு நெருக்கமான படைப்பாக இதை உணர முடிகிறது.

யுவன் சந்திரசேகர்

(Aug 22, 2012)

யுவன் சந்திரசேகர் என்ற பெயரைக் கேள்விப்பட்டு 'குள்ளச்சித்தன் சரித்திரம்' வாங்கி 'இதென்ன அலுப்பு நடை' என அரைகுறையில் நாவலை வாசிப்பதைக் கைவிட்டிருந்தேன். பிறகு 'கானல் நதி'யும் அவ்வாறே. அண்மையில் நூலகம் சென்றபோது 'மணற்கேணி' யைக் கண்டு இதற்குத்தானா இம்முறை இயல்விருதுக்காரர்கள் நாவலுக்கான விருதைக் கொடுத்தார்கள் என நினைத்து எடுத்துவந்திருந்தேன். 100 சிறுகதைகளினால் ஆன குறுநாவல். வாசிப்பதற்கு அலுப்பில்லாது இருந்தது. ஆனால் இயல்விருது இதற்குக் கொடுக்கப்பட்டதில்லை. 'பயணக் கதை'க்கே கொடுக்கப்பட்டிருந்தை அறிந்து, அந்த நாவலை நேற்று வாசித்து முடித்திருந்தேன். என்னவொரு கொடுமையான நாவல். மேலும் 'மணற்கேணி'யின் கதைகளை/அதில் வரும் பாத்திரங்களை இன்னும் கெடச் செய்து எழுதப்பட்டு முன்னர் எழுதிய தன் நாவலைத் தழுவி எழுதிய மோசமான தழுவல் நாவலெனத்தான் கூற வேண்டும். கிருஷ்ணன்/இஸ்மாயில்/சுகவனம் மூன்று பேரின் மூன்று பாகக் கதை. பெயர்கள் பிரச்சினையில்லை. ஆனால் ஒரே அக்கிரகாரத்து நாற்றந்தான் தாங்க முடியவில்லை. அட முஸ்லிமான இஸ்மாயில் ஏதாவது புதுக்கதை சொல்வார் என்றால் அவரும் நாசமாய்ப் போன பிராமணர்களின் கதையையே சொல்கிறார். இப்படி ஒரு முஸ்லிமை அக்கிரகாரத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்பார்க்க பிராமணர்கள் உள்ளே விட்டிருந்தார்கள் என்றால் அது ஒரு உலக அதிசயமாய்த்தானிருக்க வேண்டும். இப்படியொரு அபத்த நாவலுக்கு சிறந்த நாவல் விருது கொடுக்க இயல்விருதுக்காரர்களால் மட்டுமே முடியும். எனென்றால் இவர்களை ஆட்டுவிப்பவர் யாரென்றால்...

ஞாபகம்

(Oct 28, 2013)

நேற்று நள்ளிரவு திடீரென நான் படித்த உயர்கல்லூரிக்குப் போகும் எண்ணம் தோன்ற அங்கு போயிருந்தேன். பாடசாலையும் அதனருகில் இருந்த பஸ் தரிப்பு நிலையத்தையும் மழை தூறிக்கொண்டிருந்த பொழுதில் பார்த்தபோது எத்தனையோ நினைவுகள் மழையுடன் சேர்ந்து கரைந்துகொண்டிருந்தன. கனடா வந்த புதிதில் என்னுடைய எல்லாத் தத்தளிப்புக்களுக்கும் அதுதான் சாட்சியல்லவா? எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் எத்தனை ஆயிரமாயிரம் மாணவர்களை அது கண்டிருக்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கடந்தகாலங்களைத் தந்துவிட்டு தனித்து மவுனமாக நின்றுகொண்டிருக்கும் அதைப் பார்த்தபோது நெகிழ்வாயிருந்தது. பிறகான காலத்தில் வளாகம் போய் அங்கே கிடைத்த நண்பர்களை எல்லாம் தொலைத்தபின்னும் இன்னும் உயர்கல்லூரியில் படித்த நண்பர்களோடு தொடர்போடிருக்கின்றேன் அது ஏனென்று எண்ணும்போது அவர்களும் என்னைப் போன்ற புதிய சூழலிற்குத் தகவமைக்க தத்தளித்தவர்கள் என்பதைவிட என்னை என் பதின்ம வயதுகளிலிருந்தே அத்தனை பலவீனங்களுடன் அறிந்துகொண்டவர்கள் என்பதால்தான் என்றே தோன்றுகின்றது. போகும் வழியில் பொலிஸ் R.I.D.Eற்காய் மறித்து நீ இன்று குடித்திருக்கின்றாயா எனக் கேட்டார்கள். பாடசாலைக்குப் போகும்போதெல்லாம் யாரும் குடிப்பார்களா என்ன :)

'ஆடு ஜீவிதம்'

(Nov 04, 2012)

'ஆடு ஜீவிதம்' அண்மையில் வாசித்ததில் மிகவும் பாதித்த ஒரு நாவல். கல்ஃபில் மனித நடமாட்டமற்ற பாலைவனத்தில் ஆடு மேய்ப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒருவரின் வாழ்க்கை. யாருமற்ற தனிமையில் ஆடுகளில் இன்னொரு ஆடாக - அவரின் அர்பாபுவால் கிட்டத்தட்ட அடிமை'யாக நடத்தப்பட்ட ஒருவர் பிறகு தப்பிச் செல்வதும்... பெருந்துயரான பயணம். பென்யாமின் மலையாளத்தில் எழுதிய நாவலை தமிழ்ல் எஸ்.ராமன் மொழிபெயர்த்திருக்கின்றார்.

எஸ்.வி.ஆர் X ஜெமோ

(Nov 11, 2012)

எஸ்.வி.ஆர் X ஜெமோ வழக்கைப் பார்த்துவிட்டு ஏதோ சிற்றிதழ் கலாசாரத்தில் இது புதிதென்று எழுதுபவர்களைப் பார்க்க எரிச்சலே வருகிறது. சுராவும் வெங்கட்சாமிநாதனும் அடிபட்டதை மறந்துவிட்டார்களா என்ன? சுராவையாவது ஜேஜே குறிப்புகள் எழுதியவர் என்றளவில் மதிப்பிருந்தது. வெசாவின் எழுத்து என்னால் செரிக்க முடியாதது. இருந்தபோதும் அந்த மனிதரை நீதிமன்றத்துக்கு சுராவும் கண்ணனும் இழுத்தபோது கவலையாகத்தானிருந்தது. இந்த முதிய வயதிலும் ஏன் இப்படி இருவரும் நீதிமன்றம் போகுமளவிற்கு காழ்ப்புணர்வு கொண்டிருக்கின்றார்கள் என யோசித்திருமிருக்கின்றேன். இறுதியில் என்னால் நீதிமன்றம் அடிக்கடி போய்வரமுடியாதென வெசா சுரா தரப்போடு சமரசம் செய்தாரென நினைக்கிறேன். முகநூல் புதிய வாசகர்களைத்தான் குறுகுறுப்பில் எல்லாவற்றையும் எழுதவைக்கும் என்றால் ஒருகாலத்தில் அறிவுஜீவிகள் என நான் நினைத்துக்கொண்டவர்கள் எழுதும்போது இவர்கள் முகநூலுக்கு வராமல் விட்டிருந்தால் நல்லது போலவே தோன்றுகின்றது. இந்தத் தசாப்தம் ஆளுமைகளின் வீழ்ச்சிக்காலம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. மேலும் தர்மபுரியில் எரிக்கப்பட்ட தலித் வீடுகளைப் பற்றி இவர்களில் எத்தனை பேர் எழுதுகின்றார்களெனவும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இப்படித்தானே ஈழத்தில் இறுதிப்போர் நிகழ்ந்தபோதும் மவுனமாய் இருந்துவிட்டு பின்னர் தம் சொகுசான கூடுகளை விட்டு ஆமையைப் போல எட்டிப் பார்த்து வியாக்கியானம் செய்தவர்கள் என்பதை நாம் அவ்வளவு மறந்து போகப் போவதுமில்லை.

Monday, June 10, 2013

எஸ்.என்.நாகராஜன்

(Dec 12, 2012)

நேற்று வெளியிடப்பட்ட 'காலம் -40' இதழில் எஸ்.என்.நாகராஜனின் நேர்காணலை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தபோது ஏமாற்றமாகவே இருந்தது. 120 பக்கங்களில் விரைவில் (2013ல்) வெளிவரப்போகும் நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளே காலத்தில் வெளிவந்திருப்பதால் நூலை முழுதாய் வாசித்தபின்னரே கருத்துக்கூறல் நியாயமாக இருக்கும் என்பது ஒருபுறமாய் வைத்துக்கொண்டு வாசித்தவற்றைச் சிலதை எழுத விழைகிறேன். மாவோவின் ஒரு காலகட்டத்தை நம்பும் (கிட்டத்தட்ட வழிபடும்) எஸ்.என்.என் பெரியாரையோ அம்பேத்காரரையோ அவ்வாறு ஒரு பகுதியாகவும் ஏற்றுக்கொள்ளத்தயங்கிறார் என்பது ஏனென்பது புரியவில்லை. ‘பெரியாருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது இயந்திரத்தனமான பொருள்முதல் வாதம்’ என்கின்றார். அம்பேத்கார் நேரு போட்ட சூழ்ச்சியில் வீழ்ந்துவிட்டார் என்கிறார். எனினும் பெரியாரையோ அம்பேத்காரையோ முதலில் விமர்சிக்க முன்னர் மார்க்சியர்களான நாமே ஒழுங்காய் இருக்கவில்லை அதைத்தான் முதலில் கவனிக்கவேண்டும் என்கின்ற அவரின் நேர்மையைக் குறிப்பிட்டாக வேண்டும்.

குடும்பச் சூழல் குறித்த ஒரு கேள்வியில் தென்கலை வைணவர் பிறந்தவர் என்பதைக் கூறுகின்ற எஸ்.என்.என் தென்கலை வைணவர்கள் சாதி பார்ப்பதில்லை என திரும்பத் திரும்பக் கூறுகின்றார். சரி என்ன உதாரணங்களை கூறுகின்றார் எனப் பார்த்தால் பிள்ளைமாரோடு, நாடார்களோடும் முஸ்லிமகளோடும் நட்பாய் தானும் தன் தந்தையும் இருந்ததைக் குறிப்பிடுகின்றார். நாடாரும் ஒரு கிறிஸ்தவர், ரென்னிஸ் பாட்னர். எங்கேயேவாது ஒரு தலித் நண்பர் அல்லது தலித்துக்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து சகயமாகப் பழக முடிந்தது பற்றி என்பது எதுவுமே இல்லை. ஆனால் முரண்நகை என்னவென்றால் பெரியார் பிராமணியத்துக்கெதிராய்த்தான் போராடினார் பிள்ளைமார் சாதியினருக்கு எதிராகப் போராடவில்லை என எஸ்.என்.என் விமர்சிக்கின்றார். பெரியார்  தலித்துக்களையே கவனிக்கவில்லை எனக் கூறும் எஸ்.என்.என்னும் அப்படியான உதாரணங்களைத் தானே தன் வாழ்விலிருந்து தானும் தருகின்றார்.

நம் சமூகத்தில் உயர்சாதியினர் எனப்படுவோர் தம்மைச் ‘சாதி பார்ப்பதில்லை’ எனத் தொடர்ந்து நிரூபிக்க முயன்றுகொண்டிருப்பார்கள். அப்படிச் சொல்வதே ஒரு அபத்தம் என்பது ஒருபுறமிருக்க, உதாரணங்களைக் கேட்டால் தங்களுக்கு அடுத்த படிநிலையில், தங்களைப் போல வர விரும்புபவர்களோடுதான் உறவையும் நட்பையும் வைத்திருப்பார்கள். அவர்களின் அளவில் அதுதான் சாதி பார்க்காதது. மேலும் நம் சமூகத்தில் மதம் மாறித் திருமணம் செய்வதைக் கூடச் சகித்துக்கொள்பவர்களால்கூட ஒருபோதும் சாதி மாறித் திருமணஞ்செய்வதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இவைதான் என்.எஸ்.என்னின் குடும்பச் சூழலிலிருந்து வெளிவருகின்றது. ஆகவே அவர் சாதி பார்க்கவில்லை எனக் கூறுவதை நீங்கள் எந்தச் சாதியைப் பார்க்கவில்லை எனத்திரும்பக் கேட்க வேண்டியிருக்கின்றது. மேலும் மாவோயே கீழைக்காற்றுக்குக் கொண்டுவரும்போது வைணவத்தின் வழியில் வைத்துப் பார்க்கின்றீர்களே அது கூட நீங்கள் ஒருவகையில் நீங்கள் உங்கள் சுயசாதியிலிருந்து வெளியேறவில்லை என்பதைத்தானே காட்டுகின்றதென ஒருவர் விமர்சனமாக வைக்கமுடியுமல்லவா? ஏன் மாவோவை சாதியை முற்றாகவோ நிராகரித்த பவுத்தத்தினதோ அல்லது சமணத்தினதோ வழியில் வைத்துப் பார்க்க முடியவில்லை?

பெரியார் நீங்கள் கூறுகின்றபடி இயந்திரத்தனமான பொருள் முதல்வாதியாக இருந்தால்கூட, சொந்தச் சாதியிலிருந்து தற்கொலை செய்துவிட்டு அல்லவா வெளியேறச் சொன்னவர்...அதாவது பிராமணராக இருந்தாலென்ன, பிள்ளைமாராயிருந்தாலென்ன, வெள்ளாராயிருந்தென்ன? தன் சுயசாதியிருந்து வெளியேறாத ஒருவரிடமிருந்து எதையும் எதிர்ப்பார்க்கூடாதென்றல்லவா பெரியார் சொல்லித் தந்திருக்கின்றார்..

இந்தக் குறிப்பை எழுத வந்ததன் முக்கிய நோக்கம், .எஸ்.என்.என்னிடம் ஜீவா பெரியார் குறித்த விமர்சனமாக, ஒன்றை முன்வைக்கிறார்.
‘ஈழத்தில் போய் கோயிலுக்குள்ளே (பெரியார்) போனாரே, ஏன் தஞ்சாவூர் கோயிலுக்குள் போகவில்லை? அங்கேதான் போனாரே தவிர, இங்கே மீனாட்சியம்மன் கோயில், தஞ்சாவூர்க் கோயில் கோயில், சிதம்பரம் கோயில் என்று அந்தக் கோயிலுக்குள் போயிருக்கலாம் அல்லவா, தாழ்த்தப்பட்டவர்களைக் கூட்டிக்கொண்டு?’ சொன்னவர் ஜீவா. பெரியாரை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் காரணம் என்று அவர் பேசினார்.  என எஸ்.என்.என் கூறுகிறார்.

உண்மையில் பெரியார் ஈழத்துக்குப் போய் கோயில் பிரவேசங்களைச் செய்திருக்கின்றாரா? யாராவது அறிந்தவர்கள் இதுபற்றிக் கூறமுடியுமா. கொழும்புக்குப் பெரியார் சென்றிருக்கின்றார் என்று தெரியும். ஆனால் ஆலயப் பிரவேசங்களைச் செய்தார் என்பதை இதுவரை அறிந்ததில்லை. மற்றது இந்தியாவில் இடதுசாரிகள் இவ்வளவு தீர்க்கமாய்  வர்க்கப் போராட்டத்தைப் போல சாதியைத் தனிப்பெரும் விடயமாய் எடுத்துக்கொண்டு அன்றைய காலத்தில் விவாத்திருக்கின்றார்களா? எனெனில் ஜீவா பெரியாரை நிராகரிப்பதே பெரியார் ஏதோ சாதி மறுப்பை ஒழுங்காய்ச் செய்யவில்லை என்கின்ற கருத்தின் அடிப்படையில் போன்றிருக்கின்றது. 

மேலும் இவ்வாறாக கேட்பதால் எஸ்.என்.என்னை நிராகரிப்பது என்று அர்த்தமில்லை. மேலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஆவல் மட்டுமே.

அரங்கப் பட்டறைகள்

(May 20,2013)

இன்று மெளனகுருவின் 'அரங்க ஆய்வு கூடம்' மற்றும் 'புத்தாக்க அரங்க இயக்கம்' போன்ற ஈழத்தில் இயங்கும் அரங்க அமைப்புக்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருகாலத்தில் மூடுண்ட யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நாடக பயிற்சிப் பட்டறைகளே என்னை வேறொரு திசையில் நின்று சிந்திக்க வைத்திருக்கின்றன. எங்கள் பாடசாலையில் யாழ் பல்கலைக்கழக வளாக மாணவர்களால் நடத்தப்பட்ட அரங்கப்பட்டறை என்னை நாடங்களின் மேல் ஆர்வம் வரச்செய்து கோகிலா மகேந்திரனிடம் சில வருடங்கள் நாடகப் பயிற்சி பெறச் செய்திருந்தது. இடையில் அக்கா கூட்டிக்கொண்டுப் போய்க்காட்டிய கைலாசபதி அரங்கில்(?) நிகழ்ந்த 'புதியதொரு வீடு' இசை நாடகமும், பிறகு எங்கள் பாடசாலையில் யாழ் பல்கலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட 'கோடை' நாடகமும் ஏதோ ஒருவகையில் எனக்குத் திசை காட்டியிருக்கின்றன. கனடா வந்ததன்பின் நாடகங்களுக்கான பார்வையாளனாக மட்டுமே இருந்திருக்கின்றேன் என்றாலும் அண்மையில் சுமதியின் 'உயிர்ப்பு' அரங்கப்பட்டறையின் நாடகங்களுக்கு பின்னணியில் சிற்சில உதவிகள் செய்தபோது மீண்டும் அந்த கூட்டுழைப்பின் தருணங்களை உணர முடிந்திருந்தது. நாடகம்/நாடகப் பயிற்சிப் பட்டறைகள் பல்வேறு மனிதர்களோடு நாம் இணைந்து (சிலவேளைகளில் முரண்பட்டால் கூட) வேலை செய்வதற்கான சகிப்புத்தன்மையும், நம்மைப் போலவே பிறரையும் மதிக்கக் கற்றுக்கொள்ளலையும், நம்மை நாமே உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் தருகின்றன என நம்புகிறேன். போரின் அழிவுகளால் காயப்பட்டுப்போன ஈழத்தமிழர்களுக்கு இப்போதைக்கு ஒரளவேனும் நம்பிக்கை தரக்கூடியதும் சாத்தியமானதுமானதுமான ஒரு வெளி இதுவெனவே நினைக்கின்றேன்.

The Hungry Ghost

(May 25,2013)

ஷ்யாம் செல்வதுரையின் 'The Hungry Ghosts' சிங்கள-தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தவரும் தற்பாலினருமான சிவனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரமும் பிற பாத்திரங்களுடோ முரண்களோடும் அதனால் வரும் பதற்றங்களோடும் சிலவேளைகளில் மூர்க்கத்தோடும் இருக்கின்றன. சிறுவனான சிவன் தன் வாழ்வில் பிறரில் நலங்களுக்காய்த் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலிபீடத்திற்கு முன் வைக்கப்படும் ஒருவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். கதையின் முதற்பாகம் 83 இனக்கலவரத்தோடு முற்றுப்பெற, இரண்டாம் பாகம் ரொரண்டோவில் நிகழ்கின்றது. ரொரண்டோவிலிருந்து பிறகு வன்கூவருக்கும், திரும்பவும் இலங்கையிற்கும் என நீளும் நாவலை சுவாரசியமாக வாசித்துக்கொண்டு போகலாம். ஒவ்வொரு பாத்திரமும் தான் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் குற்றங்களுக்கு அடுத்த பிறப்பிலாவது நல்வினை கிடைக்காதா என ஏங்குகின்றன. ஆனால் அந்த ஏக்கங்களும் அதற்காய்ச் செய்ய முயலும் பிரயச்சித்தங்களும் இன்னுமின்னும் குற்றங்களைப் பெருக்குவதை ஒவ்வொரு பாத்திரமும் செய்வதறியாது திகைத்துப் பார்த்தபடியிருக்கின்றன. ஜேவிபி காலம், புலிகள், சந்திரிக்கா அரசு, யோர்க் பல்கலைக்கழகம், ஸ்காபரோ, மெட்ரோ ரொறொண்டோ என நாம் பரீட்சயம் கொண்ட/கொள்கின்ற பின்னணிச் சூழல் கதையை வாசிக்கும் நம்மை நெருக்கமாய் உணர வைக்கின்றது. ஆனால் தெரிந்த பின்னணியில் தெரியாத கதையை ஷ்யாம் எழுதியிருப்பாரோ எனத் தேடும்போது சிலவேளை ஏமாற்றம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் தற்பாலினரின் உறவுகள் முக்கியமாய் புலம்பெயர்ந்த தற்பாலினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகவும் அங்கேயும் இருக்கக்கூடிய காதல், பொறாமை, கோபம் பற்றி நுட்பமாகவும் உறவுகள் குறித்துப் பேசும் பகுதிகள் முக்கியமானவை. ஷ்யாம் உறவுகளில் இருக்கும் சிறுசிறு விடயங்களைக் கூட நுண்ணியதாய் அவதானித்து வைக்கும்போது இரசிக்க முடிகின்றது. ஆனால் கதையில் -முக்கியமாய் இலங்கை/புலம்பெயர் வாழ்வு என வாழும் சிவனின் பாத்திரம் - கொஞ்சமேனும் நகைச்சுவை உணர்வில்லாது ஏன் மிகச் சீரியஸாக எப்போதுமிருப்பதாய் வார்க்கப்பட்டிருக்கிறதென்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். முடிவுவரை சுவாரசியமாய் நகரும் நாவல் இறுதியில் சற்று தளம்பினாற் போலிருந்தது. முடிவை வேறு வகையாக முடித்திருக்கலாம் எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் தவிர்க்காமல் வாசிக்கவேண்டிய ஒரு நாவல் எனத் துணிந்து சொல்லலாம். நாவல் குறித்து விமர்சனங்களும் இருக்கிறது, அது நாவல் குறித்து விரிவாக எழுதும் இன்னொரு பொழுதில்.....

சுந்தர ராமசாமி - ஜெயமோகன்

(May 25, 2013)

சுந்தர ராமசாமியிற்கு 'ஜே. ஜே.சிலகுறிப்புகளும்', நல்ல சில சிறுகதைகளும், ஜெயமோகனிற்கும் 'விஷ்ணுபுரமும்', கொஞ்சம் சில கதைகளும்... இவற்றின் மூலம் மட்டுமே நான் இவர்களை அடையாளங் காண்கிறேன். சுந்தர ராமசாமியை நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அவருக்கு அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் அவரோடு முரண்பட்டு அதேசமயம் மதிப்புடனும் சுராவை விமர்சித்து மேலெழுந்துகொண்டிருந்த காலம். ஆனால் ஜெயமோகனுக்கு இவ்வளவு தீவிர வாசகர்கள் இருந்தாலும் அவரின் பாதிப்பில் வந்த அடுத்த தலைமுறை எழுத்தாளர்களைக் காணக்கிடைக்கவில்லை என்பது ஜெயமோகன் தன் சிந்தனையொத்தே எல்லோரையும் உருவாக்கி எதற்கும் உதவா 'எழுத்து குளோனிங்' தான் செய்கிறாரோ என யோசிக்க வேண்டியிருக்கின்றது. 'அசோகவனம்' நாவல் இத்தனை காலமாய் எழுதிக்கொண்டிருக்கிறாரே என்கின்றபோது சுராவின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கு' நிகழ்ந்ததுதான் நடக்கும் போலத் தோன்றுகிறது. என்னதான் அபத்தமாய் எழுதித் தள்ளினாலும் உரையாடுவதற்கு நல்லதொரு மனிதர் ஜெயமோகன், அவர் தன் பிற்காலங்களில் வீழ்ச்சியிற்கு போகிறாரே என நினைக்கத்தான்...!

மஞ்சுள வெடிவர்த்தன

(Feb 26,2013)

"வரலாறு நீளவும் தமிழ்ச் சமூகத்துக்குச் சிங்களவர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் இறுதியில் நாற்பத்தொன்பதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்தவேளையில் சிங்களத்தில் கவிதை எழுதுவது மிலேச்சனத்தனமானது என்பதைத் தெரிந்து கொண்டே கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களவர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியிலிருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும் இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களவர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்." இப்படி 'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பில் சொல்கின்ற மஞ்சுள வெடிவர்த்தனவைப் போன்றவர்க்கே எழுத்து இன்னொரு ஆயுதமே தவிர, அசோகரைப் போல மகிந்தா மாறிவிடுவார் தயவுசெய்து ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் என இறைஞ்சுவோரின் கவிதைகளோ அல்லது அதை எடுத்துப்போடும் முகநூல் போன்ற பொழுதுபோக்குத்தளங்களில் கூட தனக்கு மாற்றாக கூறுவதைச் சகிக்காது தடைசெய்வோருக்கோ எழுத்து என்பது ஆயுதமானால் அது அபத்தமாயல்ல, ஆபத்தாகிவிடும்.

சித்திராப் பெளர்ணமி

(Apr 25, 2013)

இன்று சித்திராப் பெளர்ணமி. ஊர் வைரவர் கோயிலின் முன்றலில் ஊர் கூடிச் சமைத்து குளிர்த்தியுண்ட நாட்கள் நினைவில் கரைகிறது. சும்மா இருந்த வைரவரை 'ஞான வைரவராக்கி' புனிதமாக்கியபோதும், குளிக்காமலே தனக்கருகிலேயே நின்று சங்கு ஊதுகின்ற/மணியடிக்கின்ற தருணங்களையெல்லாம் வைரவர் எனக்குத் தந்திருக்கின்றார். வைரவர் திருவிழாவில் அடிக்கின்ற மேளத்தைப் பார்த்தே மேளம் பழகக்கூட ஆசைப்பட்டுமிருக்கின்றேன். அந்த வயதுகளில் என்னைவிட மேளம் பெரிதாக இருந்ததால் என்னளவிற்குப் பொருத்தமான மிருதங்கம் பழக மட்டுமே என்னாள் பிறகு முடிந்திருந்தது. அதேபோன்று வைரவர் கோயில் பூசை செய்யும் பங்கிருந்த வயதுபோன ஜயாவிடம் உடுக்குப் பழகியிருக்கின்றேன். அவரிடம் உடுக்குப் பழகவும், அது குறித்து ஆய்வுகள் செய்யவும் பழக வந்த பலரைக் கண்டபோதும், அவரளவில் அவருக்குப் பின் எவரும் அவரின் குடும்பத்தில் உடுக்குப் பழகாததில் வருத்தம் இருந்திருக்கவேண்டும். கோயில் பூசாரியாயிருந்த -மிகவும் மென்மையாய்ப் பேசுகின்ற- அவரின் மருமகன் முள்ளிவாய்க்காலில் காலில் செல் துண்டு தாக்கி உரிய மருத்துவ வசதியின்றி இறந்தும்விட்டார். ஊரை, கோயிலை விட்டு உயிருக்குத் தப்பியோடிய தசாப்தங்களின் பின் வைரவரை (சூலாயுதம்) இன்னொரு கிராமத்தில் கண்டெடுத்தாய்ச் சொன்னார்கள். வைரவரை யாரோ வேண்டுமென்று எடுத்துச் சென்று இன்னொரிடத்தில் வீசியிருக்கின்றார்கள் என்று சொல்பவர்களை நான் நம்பப்போவதில்லை. சனமில்லா ஊரையும், ஒழுங்காய்ப் பூசைகளுமில்லா தன் நிலையையும் கண்ட சோகத்தில்தான் வைரவர் தானாகவே இன்னொரு இடத்திற்கு எங்களைப் போலவே அகதியாய் இடம்பெயர்ந்திருப்பார் என்றே நான் இன்னும் நம்புகின்றேன்.

To Rome With Love

(Jun 04, 2013)

வூடி அலன் நடித்த படங்களை விட, அவர் இயக்கிய படங்களை விரும்பிப் பார்ப்பேன். அநேகமான அவரின் படங்களில் மனித உறவுகளின் சிக்கல்களை, வெவ்வேறான நிலப்பரப்புக்களின் பின்னணியில் வைத்து நகைச்சுவையாகவும், மிக இயல்பாகவும் நெறியாள்கை செய்திருப்பார். Midnight in Paris, Vicky Cristina Barcelona, Match Point, Scoop என நிறையப் படங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம் (Scarlett Johansson எனக்குப் பிடித்த நடிகையானதும் வூடி அலனின் படங்களினாற்றான்) . அந்தவகையில் இறுதியில் வந்தது To Rome With Love. Netflixல் என்னவோ பிரச்சினையோ தெரியவில்லை, இத்தாலியன் கதைக்கும் பகுதிகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. படத்தில் அரைவாசிக்கு மேலாய் இத்தாலியனில் போனாலும், அது விளங்காமலே சிரித்து இரசித்துப் பார்த்தேன். குளியலறைப் பாடகர்களும், Name Dropping அறிவுஜீவிகளும் இந்தப் படத்தில் தங்களை இன்னொருமுறை பார்த்து இரசித்துக்கொள்ளலாம் . எப்போதும் 'காதலிக்கும் மனம்' கொண்டவர்களுக்கு இது தவறவிடாது பார்க்கவேண்டிய படமென்றெல்லாம் தனியே சொல்லி அவர்களை நான் அவமானப்படுத்தப் போவதில்லை

ஆறாவடு

(Jan 12, 2012)

சயந்தனின் ஆறாவடு நாவல் ஒரு படகுப்பயணத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டாலும் அது விரியும் காலம் இரண்டு சமாதானக் காலங்களுக்கு இடையிலானது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து பிரபா-இரணில் ஒப்பந்தம் முறிவதற்கு சற்று முன்னரானது. இதுவரை அநேகமாய் வந்த அரசியல் புனைவுகளை எழுதியவர்களில் அநேகர் இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவராயிருக்கும்போது இது எல்லா அதிகாரங்களுக்குமிடையில் அல்லாடும் ஒரு தனிமனிதரின்(சனத்தின்) இருப்பிலிருந்து எழுவதால் முக்கியமான பிரதியாகிவிடுகிறது. முக்கியமாய் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழநேர்ந்த நம் அனைவருக்கும் புலிகள்/இராணுவம் பற்றிய இவ்வாறான dynamic பார்வைகளிருக்குமே தவிர, rigidity யாய் எதுவுமே இருக்காது. இல்லாவிட்டால் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் மிக எளிதில் இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர் அந்த வாழ்வு நிலைக்குத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது. அடித்தளத்தில் மக்கள் தமக்கு எது வேண்டுமென நிதானமாய் யோசிக்கமுன்னரே Hierarchy முறையில் எல்லாமே மேலிருந்து பிரயோகிக்கப்படும்போது தப்புதல் அல்லது தக்கண பிழைத்தலுக்கு ஏற்ப மாறவேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம். முக்கியமாய் இயல்பான சூழ்நிலை என்பதே எப்படி என்பதே அறியாத போர்க்காலப் பதற்றங்களிடையே பிறந்த சயந்தனைப் போன்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவே இயல்பாய் நிகழ்வும் கூடியது.

அதை ஆறாவடு தெளிவாகப் பிரதிபலிப்பதால் நான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்வை இன்னொருமுறை பார்ப்பதுபோல நெருக்கத்தைத் தந்திருந்தது. விமர்சனமாய் சில சம்பவங்கள் அதீத romanticized செய்யப்பட்டதையும், விடுபடலாய், யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி எந்தக் குறிப்பும் வராததையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்தின் காலம் பற்றிய விரிவாக எழுதப்பட்ட பிரதியில் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறிப்பிடாதது ஏனென்ற கேள்வி எழுதல் இயல்பானதே. மற்றுபடி 80களில் பிறந்த தலைமுறையிலிருந்து வெளிவருகின்ற நாவல்களில் இஃதொரு முக்கியமான நாவல் மட்டுமல்ல, அதன் பார்வைகள் முன்னைய தலைமுறையிலிருந்து பலவிடயங்களில் வேறுபட்டதாகவும் இருக்கும் என்பதற்கும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

சித்தப்பா

(Mar 11, 2012)

அண்மையில் காலமான எங்கள் சித்தப்பாவின் ஞாபகார்த்தமாய் 'யாழ்ப்பாண மாட்டுவண்டிச் சவாரி' என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. எம்.ஏ.நுஃமானின் முன்னுரையோடு வந்திருக்கும் இந்நூலில் த.சண்முகசுந்தரத்தின் ஆறுகட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 'யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி' ஒரு நீளமான கட்டுரை. இத்துடன் என்னை அதிகம் கவர்ந்தவை 'ஈழத்திற் சைவக் கிராமிய வழிபாடு'ம், 'சித்தர் பரம்பரை: ஓர் ஆய்வு' என்பவையுமாகும். 'ஈழத்திற் சைவக் கிராமிய வழிபாடு' என்கிற கட்டுரை வித்தியானந்தனால் 4ம் தமிழாராய்ச்சி மாநாட்டில் (1974ல்) தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் வெளிவந்திருக்கின்றது. அப்போதே மானுடவியல் அவ்வளவு பரிட்சயமற்ற சூழலில் இவை பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர் என்பது முக்கியமாய்ப்படுகிறது. 


அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
'நாச்சிமார் வழிபாடு எழுந்தது பற்றிக் கருத்து வேற்றுமை உண்டு. ஈழத்துச் செவி வழி வந்த கதைப்படி வன்னியில் உள்ள ஏழு நாச்சியார்கள் போர்த்துக்கேயரின் கைபட்டு கற்பிழந்து வாழ விரும்பாமல் குன்றிமணியை இடித்துத் தின்று மடிந்தனர். இவர்கள் நினைவிற்காகவே நாச்சிமார் வழிபாடு எழுந்தது என்பது ஒரு சாரார் (இன்னொருசாரார் தமிழ்நாட்டில் உள்ள ஏழு கன்னிகைகள் வழிபாட்டை ஒத்தது என்பர்). முனியப்பரும் போர்த்துக்கேயரை எதிர்த்து வீரமுடன் போராடி மடிந்த தளபதி என்பது செவிவழி வந்த கதை. காமாட்சி அம்மன் இரும்பு உலோகத் தொழிலாளரின் தெய்வம். அண்ணமார், கூட்டத்தார் என்பவை மரமேறுபவர்களின் தெய்வங்கள். கூட்டத்தார் என்பவர்கள் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடி மடிந்த பாளைக்கத்தி பள்ளரின் கூட்டத்தைக் குறிக்கும் என்பது செவிவழிவந்த கதை. சேவுகர், படைக்கலர் என்கிற வழிபாடுகள் இப்போதில்லை எனலாம். இவை அய்யனாரின் காவற்படையினர் என்பது தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் நிலவுகின்ற நம்பிக்கை. அண்ணமார் வழிபாடு பற்றிய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவர்களில் மேம்பட்டவர்களாக கருதப்படுகின்ற தென்புலத்தார் வழிபாடு இது என்பர் ஒரு சாரர். அண்ணல்மார் என்பதுதான் அண்ணமாரெனத் திரிந்தது என்பர். விறுமர், கிங்கரர் என்பவை சுடலையில் உள்ள தேவதைகள் என்பர்.
....
நீலி என்பது காளியின் பெயர். இந்த வழிபாடு இப்போது இல்லையெனலாம். ஒவ்வொரு வீட்டிலும் தெற்கு வேலியில் கள்ளி மரமொன்றை நட்டிருப்பார்களாம். இது எல்லைக் கள்ளி எனலாம். கள்ளி நடும் வழக்கம் சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகின்றது. இந்த கள்ளிமரத்தின் கீழ கல்லொன்று வைத்து நீலியை வழிபட்டனர். 'ஆய்ச்சி, ஆயச்சி வேலியுக்கை நீலி' என்ற பழம் கூற்று இதனையே உணர்த்துகின்றது. ஆடிப்பிறப்பு போன்ற நாட்களில் வேலியில் நீலிக்குச் சிறிது படையல் செய்யப்படும். இப்படி படையல் செய்யப்படும் உணவைத் திருப்பியெடுப்பது கிடையாது. நீலி சுவைத்ததை உண்டால் நோய் அணுகும் என்பது நம்பிக்கை.
........
'சூல வைரவர் சுற்றிப் பிடிடா, வீர பத்திரா வெள்ளிப் பிரம்பு எடுத்தடிடா, காளியம்மா கழுத்தை நெரியடியம்மா' என்ற கூற்றுக்கள் இந்த (கிராமிய தெய்வங்கள் பற்றிய) நம்பிக்கையை உணர்த்துகின்றன.

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்'

(Dec 26, 2013)

கதைகளின் தொகுப்பிற்கு 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' எனப் பெயரிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றேன். இழந்துவந்த ஊரைப் படிமமாக்க 'வைரவரும்' தற்போது இருக்கும் நாட்டை நினைவுபடுத்த 'சாம்பல் வானமும்' இருக்கின்றது. மேலும் இனி இழந்து வந்த ஊரைத் திரும்பிப் பெறமுடியாது என்பது கசப்பான உண்மையெனினும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சனம் அவ்வளவாய் வசிக்காத ஊரும் மெல்ல மெல்லமாக தொலைந்துபோகின்றது. இனியொரு காலத்தில் மீளக்கட்டியமைத்தாலும் அது எனக்குத் தெரிந்த ஊராக ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை. எனவே வைரவர் சாம்பல் வானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோவதில் ஆச்சரியமில்லைத்தானே...

உங்கள் பாத்திரம்

(ஜனவரி 30,2013)

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம் தரப்பட்டிருக்கின்றன. அவற்றை நிரப்புவதே உங்களது வாழ்க்கையின் தலையாய கடமை. எதன் பொருட்டும் 'உங்கள் அல்லாத' பாத்திரங்கள் மீது ஆசைப்பட்டுவிடாதீர்கள். நீங்கள் நிரப்ப (அல்லது விரும்பினால் காலி செய்யவோ) வேண்டிய பாத்திரத்திற்கு பிற பாத்திரங்கள் இடைஞ்சலாகவோ அல்லது எரிச்சல் ஊட்டக்கூடியதாகவோ இருப்பினும் எதையும் மறந்தும் கூட கூறிவிடாதீர்கள்; எனெனில் அவற்றில் உங்களுக்கான சாபத்தின் மொழி எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் நல்லதாய் நடக்கக்கூடுமென நினைத்துக் கூறுபவற்றைக் கூட -சாபத்தின் மொழி- தலைகீழானதாக மாற்றிவிடக்கூடும். எனவே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான், நித்தமும் அமைதியாக இருப்பது. தவிர்க்கவே முடியாது எதையாவது சொல்ல உதடுகள் துடித்தால் வெளிவரத் தவிக்கும் வார்த்தைகளை பாம்பொன்றை மண்வெட்டியின் பிடியால் அடிப்பதைப் போல அடித்துக் கொண்டேயிருங்கள். உங்களுக்குத் தெரிந்ததும், ஆனால் மறுக்க விரும்புவதுமான ஒன்றிருக்கிறது - அது எவ்வளவுதான் நீங்கள் மூர்க்கமாய் அடித்தாலும் வார்த்தைப்பாம்புகள் ஒருபோதும் இறக்கவே மாட்டாது என்பது. அவை தொடர்ந்து நீங்கள் எதிர்ப்பாராத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்தெழுந்தபடியேயிருக்கும். உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் வரக்கூடும், உங்களுக்கு இந்த வாழ்க்கையில் தரப்பட்ட பாத்திரந்தான் என்னவென்று. சிலவேளைகளில் உதடுகளினூடு வெளியேறத் துடிக்கும் வார்த்தைகளை, வெளியேற விடாது மனதின் உள்ளே அடித்துப் புதைக்கும் பாத்திரந்தான் உங்களுக்குத் தரப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆகவே இந்த உலகில் எதையுமே நிராகரிக்க முடியாததைப் போல, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அரசியல் உண்டென்பதையும் இனியாவது விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

ஜெனீவா அறிக்கையும், கள்ள மவுனமும்

(மார்ச் 13,2013)

ஜெனீவாவில் முதலில் சமர்பிக்கப்பட்டதும் (மார்ச் 12) பிறகு திருத்திச் சமர்பிக்கப்பட்டதுமான (மார்ச் 19) அறிக்கையை வாசித்தபோது மிக எளிதான மனிதவுரிமை/மனிதாபிமான விடயங்களைக் கூட ஆதரிக்க இந்தியா போன்ற நாடுகள் தயங்கும்போது 'சனநாயக நாடுகள்' என்பதற்கான வரைவிலக்கணத்தை மீளவும் வரையறுக்க வேண்டும் போல இருக்கிறது.

ஜெனீவாவில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை அரசாங்கமே எல்லாவற்றையும் பொறுப்பேற்க வேண்டும் என மெல்லிய குரலில் கூறுகின்றது. அதாவது இன்ன இன்ன விடயங்கள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன, அதைத் தடுக்க வேண்டுமென இவ்வறிக்கை கூறுகின்றதே தவிர, இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் பற்றி எதுவுமே இல்லை என்றே எனக்குக் கிடைத்த/நான் வாசித்த ஜெனீவா அறிக்கையின் மூலம் அறிந்து கொள்கிறேன்.

ஜெனீவா அறிக்கை ஒரேயிடத்தில் மட்டும்  இப்படிக் கூறுகின்றது. அதாவது கவனத்தில் கொள்ளவேண்டியதென....
"பலவந்தமான காணாமற்போதல்கள், சாட்சிகளற்ற அரசின் கொலைகள், சித்திரவதைகள், பேச்சு சுதந்திரமின்மை, அமைதியாக கூட்டங்கூடுவதற்கு அனுமதியின்மை, மனிதவுரிமைவாதிகள், சிவில் சமூகத்தினர், பத்திரிகையாளர்கள் மீதான பயமுறுத்தல்களும், ஒடுக்குமுறைகளும், சுதந்திரமான நீதிமன்றத்திற்கான தடை, மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை ஆகிய மனிதவுரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்ந்து கொண்டிருப்பதால் (இந்த ஜெனீவா அறிக்கை) தன் கவலையை வெளிப்படுத்துகிறது."

ஆகவே,
"இலங்கையரசை -இவ்விடயங்களில்- தன் பொதுக் கடமையை, அதிகாரத்தைப் பகிர்வதன் மூலம் செய்வதன் மூலம், மீளிணக்கத்தைக் கொணர்ந்து, நாட்டில் எல்லோரும் முழுமையான மனிதவுரிமைகள் அனுபவிக்கச் செய்யவேண்டுமெனக் கேட்கிறது."

--------------
இதனோடு இன்னொரு பிரிவில் பல்வேறு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்த்து எப்படி இனப்படுகொலையைத் தவிர்க்க வேண்டுமெகின்ற ஒரு சிறு அறிக்கையையும் வாசிக்கக் கிடைத்தது.
---------------

இந்த எளிய, ஒவ்வொரு மனிதர்களுக்குமே சாதாரணமாய் இருக்க வேண்டிய அறிக்கைக்கே
இப்படி இலங்கை ஒரு புறம் துள்ளுகிறது, இன்னொரு புறம் இந்திய நடுவண் அரசு கள்ளமவுனம் சாதிக்கும்போது, தமிழ்பேசும் மக்களின் பராம்பரியப் பிரதேசங்களின் சுயநிர்ணய உரிமைக்கான பயணமென்பது நெடுந்தொலைவு சென்றே கடக்கவேண்டியது. 

நாம் ஒரு காலத்தில் சாத்தியமோ/சாத்தியமில்லையோ என்பதைக் கூட யோசிக்காது பெருங்கனவுக்காய் நெடும்பயணத்தை வருடக்கணக்காய் அல்ல, தசாப்தக்கணக்காய் நடத்தியவர்கள். அதற்காய்க் கொடுத்த  பெறுமதியான உயிர்களைப் பற்றிய நினைவுகளின் பதற்றத்தை  நம் ஆயுட்காலத்திலே  என்றேனும் ஒருநாள் தாண்டிஅமைதியடைந்துவிட முடியுமோ எனத் தவிப்பவர்கள். 

இன்று எழும் போராட்டங்களைப் பார்க்கும்போது இதைச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. இன்னவும் சொல்ல விருப்பமிருக்கிறது.....ஆனால் இந்தத் தருணத்தில் அல்ல.

கிளிநொச்சி - படுவாங்கரை

(Mar 24)

தீபச்செல்வனின் 'கிளிநொச்சி: போர் தின்ற நகரம்', தீபச்செல்வன் யுத்தம் முடிந்தபின் தன் உறவுகள்/நண்பர்கள்/அயலவர்களைத் தேடிச்செல்கின்ற சம்பவங்களை உருக்கமாய் முன்வைக்கின்றது. அழிவுகளின் போது மட்டுமல்ல அழிவுகளின் பின்னும் வாழ்கின்ற வாழ்வு எவ்வளவு துயரமானது என்பதற்கு இதுவும் சஞ்சயன் எழுதிய 'படுவான்கரையும்' நம் முன் வைக்கப்படுகின்ற சாடசியங்கள். சப்வேயில் 'கிளிநொச்சி'யை வாசித்தபோது தானாய் எழுந்த கண்ணீர்த்துளிகளை முன்னால் இருப்பவர்க்கு மறைக்க கஷ்டப்பட்டது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் இவ்வளவுக்கு அப்பாலும் இனி எதைச் சாதித்து எதைப் பெற்றாலும் இந்நினைவுகளின் 'வடுக்களுக்கு' மருந்திடமுடியுமா என்கின்ற அயர்ச்சியே வந்தது. 'கிளிநொச்சி'யை வாசித்தபோது இன்றைய தீபச்செல்வனை என்னால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆனால் அதற்காய் அவரின் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதல்ல அர்த்தம். அவரை இன்னொரு எதிர்முனையில் ஒதுக்கிவைப்பதை விட, சகோதர வாஞ்சையுடன் நமது முரண் உரையாடல்களை அவருடன் தொடங்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.

Trishna

(Apr 12,2012)

Michael Winterbottom ன் இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட நல்லதொரு படம். பிரீடா பின்டோ எவ்வித அலங்காரமுமில்லாது நல்லதொரு நடிகையாக பரிணாமிக்கின்ற களம். இந்தியாவின் நிலப்பரப்பை/வாழ்வை ஜிகினாத்தனங்கள் இல்லாது உள்ளதை உள்ளமாதிரி (மும்பையைக் கூட) காட்டும் ஒளிப்பதிவு அற்புதம். முடிவையும் சில காட்சிகளையும் மாற்றியிருந்தால் உச்சமான திரைப்பட அனுபவம் கிடைத்திருக்கலாம். சிலவேளை நாவலொன்றின் தழுவலில் இப்படம் எடுக்கப்பட்டதால் அதற்கு துரோகமிழைக்காது படத்தை இயக்குநனர் எடுத்து முடித்திருக்கலாம். 'That Girl In Yellow Boots' படத்தைப் பார்த்த நண்பர்கள் கூறியதைப்போல இப்படத்தின் காட்சிகளையும்- தமிழ்த் திரையில் பார்க்க- கனவாய் கண்டால் மட்டுமே சாத்தியம்.உதிர்ந்தும் உதிராத கனவு

(மே 16, 2013)

நேற்று அம்மாவோடு நானும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது விருப்பொன்றை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஈழத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலங்களில் கொட்டகை(குடில்) அமைத்து அங்கே வந்து யாரும் தங்கவும், வாசிக்கவும் கூடிய வசதிகளைச் செய்வதென்பது பற்றி. இது நான் Occupy Toronto & Occupy London போன்ற இடங்களை நேரில் பார்த்தபோது எனக்குள் முளைத்தெழும்பிய ஒரு கனவென்றும் சொல்லலாம். அத்தோடு எங்களின் நண்பரொருவர் மெக்ஸிக்கோவில் இதைவிட இன்னும் பெருங்கனவுத்திட்டத்தை முன்வைத்து அதை ஒரளவு யதார்த்தத்தில் சாத்தியமாக்கிக் காட்டியுமிருந்தார். அதாவது மெக்ஸிக்கோவில் நிலம் வாங்கி வீடமைத்து அதில் தங்கியிருப்பவர்களுக்கான எல்லாத் தேவைகளையும் (தோட்டம் செய்து/ கால்நடை வளர்த்து) அந்நிலத்தைக் கொண்டே சாத்தியமாக்குவது. இதையொத்த -பண்ணைகளில் சென்று சம்பளமில்லாது வேலை செய்து தத்தமது உணவுத் தேவைகளைத் தீர்ப்பது-என்பது நீண்டகாலமாய் நடைமுறையில் இருக்கின்றதென்றாலும், நண்பரின் மெக்ஸிக்கோ கனவு சற்று வித்தியாசமானது. அந்நிலத்தில்/வீட்டில் எவரும் தங்கியிருக்கலாம், விரும்பினால் வேலை செய்யலாம், வேலை செய்யாமல் கூட இருக்கலாம். எவரையும் எவரும் நிர்ப்பந்திக்கக்கூடாது. அதாவது எவ்வித நிர்ப்பந்தமில்லாது தமக்கு விரும்பியதை அவரவர் செய்யலாம் என்பதே இதன் முக்கிய உட்கிடை. நண்பர்/கள் இதற்கு 300 பேரிடம் தலா 100 டொலர்கள் அன்பளிப்பாய்க் கேட்டு இத்திட்டத்தை முன்வைத்தபோது யதார்த்ததை நெருங்காத ஓர் கனவுத்திட்டமென்றே நம்மில் பலர் நம்பியிருந்தோம்/சந்தேகித்திருந்தோம். எனினும் அதைத்தாண்டி என் பங்களிப்பை - சற்றுத் தயக்கத்தோடுதான்- செய்திருந்தேன். இப்போது நிலம் வாங்கப்பட்டு வீடு கட்டப்பட்டு கனவுத் திட்டம் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கின்றதென அறிகிறேன். எவ்வாறு ஒரு பொழுதில் சாத்தியமேயில்லையென நினைத்த கனவைச் சாத்தியமாக்குகின்றார்கள் என்று பார்ப்பதற்காகவேனும் நான் ஓருமுறை மெக்ஸிக்கோவிற்கு கட்டாயம் போகவேண்டும்.

இதன் நீட்சியிலே, பயன்படுத்தப்படாத காணிகளில் இவ்வாறான கொட்டகைகளை அமைத்து ஈழத்திற்கு ஏதாவது வேலைத்திட்டங்களோடு பயணிக்கும் நண்பர்கள் தங்கவும், உள்ளூரில் இருப்பவர்கள் பொழுதைக் கழிக்கவும் நூற்களை வாசிக்கவும் விவாதிக்கவும் செய்வதற்கான ஒரு திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமென கனவு கண்டு கொண்டிருக்கின்றேன். பல்வேறு நண்பர்கள் பயன்படுத்தாத தமது சொந்த நிலங்கள் அவரவர் ஊர்களில் இருக்கின்றதெனவும் சொல்லி இன்னும் ஆசையை வளர்த்துவிட்டபடி இருக்கின்றார்கள். ஈழத்தில் அநேக தமிழ்ப்பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கப்பட்டிருக்கும்போது இது சாத்தியமா என்கின்ற சந்தேகங்களிற்கும், நான் வளர்ந்த பிரதேசம் இராணுவம் சுவீகரிக்கவுள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வரப்போகின்றதா இல்லையா என்பதுகூட தெளிவாய்த் தெரியாதபோதும், ஒரு சிறுகாலடியென்றாலும் முன்னே வைக்க விரும்புகின்ற ஓர் எத்தனிப்பே இது.

என் திட்டத்தைக் கேட்ட உந்துதலிலோ என்னவோ, அம்மா வளர்ந்த நிலத்தின் வரைபடத்தை மாதிரியாக அண்ணா வரையத்தொடங்கினார். அம்மாவிற்கு ஐந்து சகோதரர்கள். யார் யாருக்கு நிலத்தில் எந்தப் பகுதி உரித்தென குறிக்கத் தொடங்கினோம். அம்மாவின் ஊர் கீரிமலைக்கு அருகிலும் முக்கிய தெருவின் ஓரத்தில் இருப்பதாலும், இந்த நிலத்தில் கொட்டகை அமைத்தால் மேலதிக வசதியாய் குளிக்கப்போகின்றவர்களுக்கு உதவியாய் இருக்குமென எனக்குள் இன்னொரு திட்டமும் ஓடியது. அம்மா இருந்த இடத்தை நாங்கள் வரையத்தொடங்கியதும், பல்வேறு மனிதர்கள்/சம்பவங்கள் அம்மாவிடமிருந்து சிறகு வளர்ந்து பறக்கத்தொடங்கின/ர். எனக்கு அந்த ஊர் மற்றும் அயலவர்கள் அவ்வளவு பரீட்சயமில்லையென்றாலும் அம்மாவும் அண்ணாவும் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த வாழ்வும், மனிதர்களும் இன்று சிதறிப்போன துயரை, 'எல்லாம் இந்தத் தமிழரசுக் கட்சியினால் வந்ததென...' ஒரு பெருமூச்சுடன் அண்ணா நிறுத்திக்கொண்டார். எங்களுக்கிடையில் மவுனம் இன்னொரு மனிதராய் வந்து அமர்ந்து உரையாடத் தொடங்கியிருந்தது.

சரி, இருந்த நிலம் யார் யாருக்கு உரித்துடையதென கட்டம் கட்டிக்கொண்டு வந்தபோது, 'எங்கே உங்களுக்கு உரித்தான நிலம்?' என்று அம்மாவிடம் கேட்டேன். 'எனக்கு ஒன்றும் தரவில்லை, எதுவும் இதில் சொந்தமில்லை' என்று சிரித்துக்கொண்டு சொன்னார் அம்மா.

அட, கீரிமலைக்குக் கிட்டவாய் கொட்டகை போடும் ஓரு கனவு இவ்வளவு எளிதாய் உதிர்ந்துபோயிற்றென எனக்கு முதலில் சலிப்பு வந்தது.. அதனாலென்ன, எதையும் சொந்தம் கொண்டாடாமல் எல்லோருக்கும் எல்லாமே சொந்தமென்று வாழும் வாழ்வென்பதுதானே எம்மைப் போன்ற பலரின் பெருங்கனவு. அம்மா தெரிந்தோ தெரியாமலே அந்தக் கனவின் முதலடியைத் தன் குடும்பத்திற்குள் சாத்தியமாக்கியிருக்கிறார் என நினைக்கின்றேன். அந்தவகையில் இதுவும் மகிழ்ச்சியான ஓரு விடயமே.