Wednesday, May 16, 2012

'புகலிடச் சிற்றிதழ்களின் தோற்றமும் வீழ்ச்சியும்'


GTBC FM வானொலிக்காய் குருப‌ர‌னும் (ய‌முனா ராஜேந்திரனும்) ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றி ப‌ல்வேறுப‌ட்ட‌ உரையாட‌ல்க‌ளை செய்துகொண்டுவ‌ருகின்றார்க‌ள். அண்மையில் 'புகலிடச் சிற்றித‌ழ்க‌ளின் தோற்ற‌மும், வீழ்ச்சியும்' என்ற‌ த‌லைப்பில் நடந்த ஒரு நிக‌ழ்வைக் கேட்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்த‌து. ஒவ்வொரு வாச‌க‌ருக்கும்/ப‌டைப்பாளிக்கும் ஏதோ ஒரு சிற்றித‌ழ்/ச‌ஞ்சிகை அவ‌ர்க‌ளின் வாசிப்பின் எல்லையை முன்ன‌க‌ர்த்திச் செல்ல‌ உத‌வி செய்திருக்கும். அந்த‌ச் சஞ்சிகைக‌ள் இடைந‌டுவில் நின்றுபோனால் கூட‌ அவ‌ற்றோடு ஒரு மான‌சீக‌மான‌ உற‌வு ஒவ்வொரு வாச‌க‌ருக்கும்  என்றும் இருக்க‌க்கூடும். ஈழ‌த்தில் சிறுவ‌ய‌துக‌ளில் 'திசை', 'ச‌ரிநிக‌ர்' போன்ற‌வை என‌க்கு அக்காவினால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டாலும், புல‌ம்பெய‌ர் வாழ்வில் என் வாசிப்பை விரிவாக்கிய‌தில் உயிர்நிழ‌லுக்கு முக்கிய‌ ப‌ங்குண்டு. த‌னிப்ப‌ட்ட‌வ‌கையில் திருமாவ‌ள‌வ‌ன், க‌லைச்செல்வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமின்றி உயிர்நிழ‌லினூடாக‌வே அம்பை,சாரு நிவேதிதா, ஆர்.பி.ராஜ‌நாய‌ஹ‌ம், அம‌ர‌ந்தா போன்ற‌ தமிழகப் ப‌டைப்பாளிக‌ளும் என‌க்கு அறிமுமான‌வ‌ர்க‌ள்.

புல‌ம்பெய‌ர் சூழ‌லில் தோன்றிய‌/தோன்றும் சிறுப‌த்திரிகைக‌ள் ப‌ற்றிய‌ ஓர் ஆய்வுக்கு இந்நிக‌ழ்ச்சி ஓர் உந்துச‌க்தியாக‌ இருக்கும் என‌வே நினைக்க்கின்றேன். அவ்வாறான‌ ஒரு ஆய்வைச் செய்ப‌வ‌ர்க‌ள் முக்கிய‌மான‌ ஒரு புள்ளியை நிச்ச‌ய‌ம் க‌வ‌ன‌த்திற்கொள்ள‌வேண்டும். புல‌ம்பெய‌ர்தேச‌த்தில் சிறுப‌த்திரிகைக‌ள் ப‌ல‌ த‌ம் அர‌சிய‌லை முன்னிறுத்த‌ என‌வும், சில‌ இல‌க்கிய‌த்தை முன்னிலைப்ப‌டுத்த‌ என‌வும் (முக்கிய‌மாய் 'சுவ‌டுக‌ள்'/'கால‌ம்' போன்ற‌வை) தோன்றியிருக்கின்ற‌ன‌. அர‌சிய‌லை நேர‌டியாக‌ வைப்ப‌து என்ப‌து ஒருவ‌கையின‌ர் என்றால் இல‌க்கிய‌த்தினூடாக‌ ம‌றைமுக‌மாய் அர‌சிய‌லை வைப்ப‌து என்ப‌து இன்னொரு வ‌கையின‌ர். இதுகூட‌ நுண்மையான‌ பிரிப்பே தவிர‌, அநேக‌ புல‌ம்பெய‌ர் சிற்றித‌ழ்க‌ள் இவ்விர‌ண்டும் க‌ல‌க்க‌ப்ப‌ட்டே வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌. அதில் இருக்கும் இல‌க்கிய‌ ம‌ற்றும் அர‌சிய‌ல் வீத‌ங்க‌ளின் விகித‌ம் கூடிக் குறைந்திருக்க‌லாமே த‌விர‌ மற்றும்படி எளிதாக‌க் க‌ண்ட‌டையாத‌ முடியாத‌ பிரிப்பே இருந்திருக்கின்ற‌ன‌. எனெனில் ஈழ‌த்த‌மிழ‌ர் வாழ்வில் இல‌க்கிய‌மும் அர‌சிய‌லும் பிரிக்க‌முடியாத‌வ‌கையில் ஊடுப‌ர‌வியிருக்கின்ற‌து என்பதே யதார்த்தமாகும்.

இதை 10 வ‌ருட‌ங்க‌ளில் முன் நாம் திண்ணை (அல்ல‌து ப‌திவுக‌ள்) விவாத‌க்க‌ள‌த்தில் கூறிய‌போது ஒருவ‌ர் அர‌சிய‌லும் இல‌க்கிய‌மும் பிரிக்க‌க்கூடிய‌து; அவ்வாறு இர‌ண்டும் சேர்த்திருந்த‌ல் சாத்தியமில்லை/த‌வ‌றான‌து என் வாதிட்டுக்கொண்டிருந்தார். அதே ந‌ப‌ரே பிறகான‌ கால‌ங்க‌ளில் இர‌ண்டும் க‌ல‌ந்திருக்க‌க்கூடிய‌தே என்ற‌வ‌கையில்  எழுதிய‌து இன்னொரு முர‌ண்ந‌கை. அவ்வாறு முன்னுக்குப் பின்னுக்கு முர‌ணாக‌, கால‌ நில‌வ‌ர‌ங்க‌ளுக்கேற்ப‌ மாறிக்கொண்டிருப்ப‌தால் அவ‌ர் இன்று 'ஒரு பிர‌ப‌ல எழுத்தாள‌ர் ம‌ற்றும் திரைப்ப‌ட‌ வ‌ச‌ன‌க‌ர்த்தாவாக‌' வ‌ர‌முடிந்திருக்கின்ற‌து. என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் ஒரேயிட‌த்தில் முர‌ண்டுபிடித்துக் கொண்டிருப்ப‌தால் பாலை நில‌த்தில் தோன்றும் க‌ள்ளிச்செடியாக‌க் கூட‌வ‌ல்ல‌, செத்துப்போன‌ ப‌டைப்பாளியாக‌ எம் உட‌லை  எங்கே புதைப்ப‌தென‌ இட‌ந்தேடி த‌மிழ்நில‌ப்ப‌ர‌ப்பெங்கும் அலைய‌வேண்டியிருக்கிற‌து.

இவ் வானொலி நிக‌ழ்வைக் கேட்ட‌போது க‌வ‌னித்த‌ சில‌விட‌ய‌ங்க‌ளை குறிப்புக‌ளாக‌ விட்டுச் செல்ல‌வேண்டும் என‌ நினைக்கின்றேன். இந்நிக‌ழ்வில் பேசிய‌ 'ம‌னித‌ம்' ர‌வி ம‌ற்றும் 'கால‌ம்' செல்வ‌ம் இருவ‌ரும் புல‌ம்பெய‌ர்சூழ‌லில் பின் ந‌வீன‌த்துவ‌ம் அறிமுக‌ப‌டுத்திய‌ வித‌ம்/ அறிமுக‌ப்ப‌டுத்திய‌வ‌ர்கள் ப‌ற்றிய‌ த‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை முன்வைக்கின்றார்க‌ள். அதேச‌ம‌ய‌ம் இருவ‌ரும்  பின் ந‌வீன‌த்துவ‌ம் ஓர் ஒதுக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ விட‌ய‌ம் என்ற‌வ‌கையில் கூற‌வில்லை என்ப‌தையும் நாம் க‌வ‌னிக்க‌வேண்டும். 'கட்டுப்பாடுகளுடைய சிறு குழுவாக‌ அர‌சிய‌ல் க‌ள‌ப்ப‌ணியாற்றிய‌ எம்மை நாம் இதுவ‌ரை செய்த‌தெல்லாம் த‌வ‌று என்ற‌ வ‌கையில் பின் ந‌வீன‌த்துவ‌த்தைப் பேசிய‌வ‌ர்க‌ள் பேசிய‌போது ந‌ம‌க்கு மிகுந்த‌ குழ‌ப்ப‌ம் வ‌ந்த‌தே என்றும், அதுவும் த‌ம் உடைவிற்கான‌ ஒரு கார‌ண‌ம்' (க‌வனிக்க‌ அது ம‌ட்டுமே கார‌ண‌ம‌ல்ல)என்கின்றார் ர‌வி. பின் ந‌வீன‌த்துவ‌ம் ஒரு த‌டால‌டியாக‌ புல‌ம்பெயர் த‌மிழ்ச்சூழ‌லில் புகுத்த‌ப்ப‌ட்ட‌தே ப‌ல‌ சிக்க‌ல்க‌ளுக்கு வ‌ழிவ‌குத்த‌தென்கின்ற‌ ர‌வி முள்ளிவாய்க்காலின்பின் மாற்று அர‌சிய‌ல் பேசிய‌ இந்த‌ பின் ந‌வீன‌த்துவாதிக‌ள் எங்கே போய்ச்சேர்ந்தார்க‌ள் என்ப‌தும் தெரிந்த‌தே என‌வும் அதில் குறிப்பிடுகின்றார். உண்மையில் இப்ப‌டி பின் ந‌வீன‌த்துவ‌ம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தாலே இன்றும் பின் ந‌வீன‌த்துவ‌ம் ப‌ற்றி உரையாட‌த்தொட‌ங்கினாலே, நாயைப் பிடி பிச்சை வேண்டாம் எனப் ப‌ல‌ரும் தூர‌ ஓடுகின்ற‌ நிலை இருக்கின்ற‌து.

என் பிரிய‌த்திற்கும் ம‌திப்பிற்குமுரிய‌ வ‌.கீதா கூட‌ பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து ஒருவ‌கையான‌ அசூசையே கொண்டிருக்கின்றார் என்ப‌து அவ‌ர‌து 'சுடருள் இருள்' நிகழ்வுப் பேச்சின்போது தெரிய‌வ‌ந்த‌து. ஆனால் பின்ன‌ர் வ‌.கீதா மாவோயிய‌ப் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றிப் பேசிய‌போது ப‌ழ‌ங்குடிக‌ளின் பிர‌ச்சினைக‌ளை ஒற்றைப் ப‌ரிணாமமாக‌ நாம் விள‌ங்கிக்கொள்ள‌முடியாது, அது த‌ன்ன‌ள‌வில் ப‌ல‌வேறு கூறுக‌ளைக் கொண்டிருக்கின்ற‌து என்றார் (உதார‌ண‌மாக‌ நில‌ங்க‌ளைப் ப‌கிர்ந்துகொடுக்கும்போது பெண்க‌ள் த‌ம‌து பெய‌ரில் எழுதித்த‌ரும்ப‌டி கேட்ப‌து, மாவோயிஸ்டுக்க‌ளில் நிறைய‌ப் பெண்க‌ள் போரிட்டாலும் பொதுப்புத்தி அதை ஆண்க‌ளின் போராட்ட‌மாக‌ ம‌ட்டும் சித்த‌ரிப்ப‌து, நில‌ ஆக்கிர‌மிப்பிற்கு எதிரான‌ போராக‌ ம‌ட்டும் தொட‌ர்ந்து ஊட‌க‌ங்க‌ள் எழுதுவ‌து). வ‌.கீதா கூறிய‌ மேற்குறித்த‌ உதார‌ண‌த்தைக் குறிப்பிட்டு, 'நீங்க‌ள் பின் ந‌வீன‌த்துவ‌ம் மீது வைக்கும் விம‌ர்ச‌ன‌ம் த‌மிழ்சூழ‌லில் விவாதிக்க‌ப்ப‌டும் பின் ந‌வீன‌த்துவ‌த்தை முன்வைத்தா அல்ல‌து பொதுவாய் பின் ந‌வீன‌த்துவ‌த்தை முன்வைத்தா?' என‌க் கேட்டிருந்தேன். மேலும் மாவோயிஸ்டுக்க‌ளின் ப‌ல்வேறு பிர‌ச்சினைக‌ளின் உட்கூறுக‌ளை நாம் இன்றையகால‌த்தில் பின் ந‌வீன‌த்துவ‌த்தை வைத்தே புரிந்துகொள‌ முடியும். இல்லாவிட்டால் ஒற்றைப் ப‌ரிமாண‌மமுள்ள (அதாவ‌து நில‌ மீட்பிற்கான‌)போராட்ட‌மாக‌ ம‌ட்டுமே பார்க்க‌ப்ப‌டும் நிலை இருக்கும் என‌க்கூறியிருந்தேன். நிக‌ழ்வில் நான் வேறு கேள்விக‌ளைச் சேர்த்துக் கேட்ட‌தாலோ அல்ல‌து என‌து இந்த‌க் கேள்வியின் தெளிவின்மையாலோ கீதா இத‌ற்கு நேர‌டியாக‌ப் ப‌தில் சொல்ல‌வில்லை. பிற‌கு ஒரு த‌னிப்ப‌ட்ட‌ ச‌ந்திப்பில் முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றிப் பேசிக்கொண்டிருந்த‌போது ஒரு இட‌த்தில் கீதா  'இன்று புலிக‌ள் க‌ள‌த்தில் இல்லாத‌தால் சோவிற்கு ம‌ட்டுமில்லை yyy ,zzz (yyyயின் குரு zzz) போன்ற‌வ‌ர்க‌ளுக்கும் பேசுவ‌த‌ற்கு ஒன்றுமில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். yyyயின் பெய‌ரை நேர‌டியாக‌ச் சொல்ல‌ என‌க்கு எந்த‌ப் பிர‌ச்சினையுமில்லை. ஆனால் என்னை, தான் பேஸ்புக்கிலிருந்து அக‌ற்றிய‌தால்தான்  அந்த வெப்பியார‌த்தில்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என‌  yyy என்ப‌வ‌ரோ அல்லது அவ‌ர‌து அனுதாபிக‌ளோ எழுதவும் கூடும் என்ப‌தால் முன்னெச்ச‌ரிகையோடு அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை இங்கே த‌விர்க்கின்றேன்.

ஆக‌ நான் நினைக்கின்றேன் த‌மிழ்ச்சூழ‌லில் பின் ந‌வீன‌த்துவ‌ம் அறிமுக‌ப்படுத்திய‌வ‌ர்க‌ள்/ அவ‌ர்க‌ளின் இன்றைய‌ நிலை குறித்துத்தான் கீதாவிற்குப் பிண‌க்குப்பாடு இருக்கிற‌தே தவிர பொதுவாய் பின் ந‌வீன‌த்துவ‌ம் மீதான‌ காழ்ப்புண‌ர்வு இல்லையென‌வே நினைக்கின்றேன். மேலும் அவ‌ல் கிடைத்துவிட்ட‌தே என்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ ஒரு குறிப்பு, கீதாவிற்குப் புலிக‌ள் மீது க‌றாரான‌ விம‌ர்ச‌ன‌ம் உண்டு.   yyy ,zzz போன்ற‌வ‌ர்க‌ள் முன்வைக்கும் 'எடுத்தேன் க‌விழ்த்தேன்' போன்ற‌ த‌டால‌டியான‌ த‌ட்டையான‌ விம‌ர்ச‌ன‌த்தில்தான்  வ.கீதாவிற்கு விருப்பு இல்லை என்ப‌தையும் க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ விரும்புகின்றேன்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62023/language/ta-IN/article.aspx

Jun 04, 2011

கசகறணம் அவ்வளவு முக்கியமான நாவலா?


1.
 கசகறணம் குறித்து அண்மைக்காலமாய் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாவலை வாசித்த பெரும்பான்மையானோருக்கு நாவலைப் பிடித்திருக்கின்றது என்பது ஃபேஸ்புக்கில் வரும் நிலைச்செய்திகளின் மூலம் தெரியவருகின்றது. ஆனால் இன்னமும் ஒரு முழுமையான பதிவை இந்நாவல் குறித்து வாசிக்க முடியவில்லை (தவறவிட்டிருந்தால் சுட்டிக்காட்டவும்).

கசகறணம் மட்டக்களப்பின் (/அம்பாறையின்) வட்டாரமொழியில் எழுதப்பட்டதாக பலரும் வியந்திருக்கின்றார்கள்.  இதற்கு முதல் விமல் எழுதிய நாவலான 'வெள்ளாவி' கூட அவ்வகையான வட்டாரமொழியில்தானே எழுதப்பட்டிருந்தது. அவ்வாறெனில் இந்நாவல் வட்டாரமொழியில் எழுதப்பட்டிருக்கிறதென வியக்கும் பலர் 'வெள்ளாவி'யை வாசிக்கவில்லையா என்கிற கேள்வியும் இருக்கின்றது.

எனவே கசகறணம் வட்டாரமொழியில் மட்டும் எழுதப்பட்டதால்தான் பலரால் முக்கிய நாவலாகப் பரிந்துரைக்கப்படுகின்றது என்ற புள்ளியைத் தவிர்த்துவிடலாம் என நினைக்கின்றேன்.

இரண்டாவது முக்கிய புள்ளியாக, அநேகர் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் எப்படி தொடங்கியதென இந்நாவல் ஆராய்ந்திருக்கின்றதென எழுதியிருக்கின்றார்கள்/ கூறியிருக்கின்றார்கள். அது ஒரளவு உண்மைதான் எனினும் அதற்கான சூழலை விரிவாக இந்நாவல் ஆராய்ந்திருக்கின்றதா என்பதும் கேள்விக்குறியே.

2.
இந்நாவலை இரவல் வாங்கியவரிடம் விரைவில் கொடுத்துவிடவேண்டும் என்பதற்காய் 1 வாரத்திலேயே வாசித்துக் கொடுத்துவிட்டதால்  நாவலிருந்து ஆதாரம் தந்து எழுத என் வசம் புத்தகம் கைவசமில்லையாததாலும் நினைவில் உள்ளவற்றை இங்கே எழுதுகின்றேன்.

நாவலில் யாழ்ப்பாணத்தில் 13 பொலிசார் கொல்லபட்டுவிட்டார்கள் என்ற குறிப்பு வருகின்றது (பொலிசார் அல்ல அது இராணுவம் என்பதே சரியானதெனும் திருத்தம் வரவேண்டும் என்பது ஒருபுறமிருக்கட்டும்). அடுத்தடுத்த பக்கங்களில் பார்த்தால் முக்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் கதாபாத்திரங்கள் இயக்கங்களில் சேர்ந்துவிடுபவையாக நாவலில் மாறிவிடுகின்றன.  

ஏன் யாழ்ப்பாணத்தில் அடிவிழுந்தவுடன் கிழக்கிலிருந்து இயக்கத்தில் போய்ச் சேர்ந்தார்கள் என்பது பெரும் இடைவெளியாகவே இருக்கின்றது. அந்த இடைவெளி என்னளவில் முக்கியமானது என்பதை ஏற்கனவே நாவலை வாசித்துவிட்டு எழுதிய நிலைத்தகவலிலும் கூறியிருக்கின்றேன். எனெனில் கிழக்கிலிருந்து இயக்கங்களுக்குப் போனவர்களுக்கு அவர்களவில் ஒடுக்குதல்கள் இருந்திருக்கின்றன. முஸ்லிம்களும் இயக்கங்களில் போய்ச் சேர்ந்திருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கும் போராடவேண்டிய தேவை இருந்திருக்கவேண்டும். ஆனால் அவற்றைப் பேசாது நாவல் ஒரெயெட்டில் பாய்ந்துவிடும்போது இந்த நாவல் உண்மையில் தமிழ்Xமுஸ்லிம் X சிங்கள முரண்பாடுகளை விரிவாக விவாதிக்கின்றனவா என்கின்ற கேள்விகள் இருக்கின்றன. வேண்டுமென்றால் ஆயுதப்போராடத்திற்கு முன்Xபின் என்கிற காலங்களை இந்நாவல் பதிவாக்கியிருக்கின்றது என வைத்துக் கொள்ளலாம்.

ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் தோன்றமுன்னரே கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே சண்டைகளும் சர்ச்சைகளும் இருந்தன என்பதை நாவல் கூறுகின்றது (தியேட்டரில் நடக்கும் சம்பவம்). ஆனால் அவ்வாறான பொழுதுகளில் அநேகமாய் இரண்டு தரப்பைச் சேர்ந்த பெரியவர்களின் தலையீடால் இவை தடுத்து நிறுத்தப்பட்டுவிடுகின்றன. ஆயுதங்கள் தூக்கப்பட்டபின்னர் ஆயுதங்களே 'சமரசம்' பேசுகின்றவையாக மாறிவிடுகின்றன.

இப்போது நாவலைவிட்டுச் சற்று வெளியே வருவோம். சில மாதங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் நண்பரோடு உரையாடியபோது அவர் கிழக்கில் சில வருடங்கள் செய்த ஆய்வுகளைப் பற்றிக் கூறினார். அதாவது எவ்வாறு தமிழ் - முஸ்லிம் முரண்கள் தோன்றியதென அடிவரை சென்று பார்க்க அவருக்கு அந்த ஆய்வு உதவியிருக்கின்றது. அவரது ஆய்வின்படி கிட்டத்தட்ட 1950களின் நடுப்பகுதிவரை பின்னோக்கிச் செல்லவேண்டியிருக்கின்றது எனவும், கிழக்கில் ஏற்பட்ட காணிபிரச்சினைகள் பற்றிய சில குறிப்புகளையும் கூறியிருந்தார். கிட்டத்தட்ட அவரது ஆய்வு முடிந்து வெளியாகும் தருவாயில் இருந்தபோதும் அன்றைய நிலையில் அதை வெளியிடவிடமுடியாதளவுக்கு முஸ்லிம் மற்றும் தமிழர் தரப்பில் நெருக்கடிகள் இருந்ததாய்க் குறிப்பிட்டார். நிச்சயம் இவ்வாறு தமிழ் முஸ்லிம்களின் உறவும் முரணும் பற்றி நேரடியாகச் செய்யப்பட்ட ஆய்வுகள் ஆகக்குறைந்த இந்தப் பொழுதிலாவது வெளிவரவேண்டுமென அன்றையபொழுதில் வ.கீதாவும், நானும் வலியுறுத்தியிருந்தோம்.

இத்தகைய ஆய்வுகள் வெளிவருவதில் என்னதொரு நன்மை இருக்கின்றதென்றால் நாம் எதிர்காலத்தில் தமிழ் -முஸ்லிம்  உறவுகளைப் பற்றி உரையாடும்போது  roots cause வரை  சென்று உரையாடலாம். இல்லாதுவிடின் சாம்பல் மூடிய எரிமலையாய் எப்போதும் இந்த இன முரண்  வெடித்துக் கொண்டேயிருக்கும்.

ஏன் இதைப்பற்றி எழுதுகின்றேன் என்றால், அண்மையில் கிழக்கில் கள்ளியங்காடு என்ற பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் இருந்த இடத்தில் இந்து ராஜயோக குமாரிகள்(?) கட்டப்பட்டிருக்கின்றது என்ற சர்ச்சை வந்திருக்கின்றது. புலிகள் இன்றிருந்தால் வழமைபோல எளிதாக 'எல்லாவற்றிற்கும் புலிகள்' தான் காரணம் என்று கூறிவிட்டு போய்விட்டிருக்கலாம். ஆனால் நான் இந்தச்சமயத்தில்தான் நம் 'மாற்றுக்கருத்து' நண்பர்கள் என்ன கூறுகின்றார்கள் எனக் கவனித்துக்கொண்டிருக்கின்றேன். முக்கியமாய் தமிழ் முஸ்லிம் இணக்கம் குறித்து புலிகள் இருக்கும்போது மாய்ந்து மாய்ந்து எழுதியவர்களும் இப்போது இது குறித்து என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால்..... வேண்டாம். மேலே ஒன்றும் கூறப்போவதில்லை. முக்கியமாய் இன்று கிழக்கின் முதலமைச்சரோடு நெருக்கமாயுள்ள 'சின்னமாஸ்ரர்' எதையாவது எங்கேயாவது எழுதுவார் எனப் பார்த்தேன். அவருக்கும் வேறு சோலிகள் நிறைய இருக்கும் போலும். அனுராதபுரத்தில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டபோது ஏன் எவருமே அறிக்கை விடவில்லை? ஆகக்குறைந்தது கண்டிப்பதாய்க் கூட தம் தளங்களில் எழுதவில்லையே?

அவர்களை விடுவோம். உண்மையான அக்கறையோடு இந்தப் பிரச்சினை குறித்து நாம் உரையாடல்களைத் தொடங்கவேண்டும். எனெனில் இவ்வாறான பிரச்சினைகள் தான் ஒரு இனம் இன்னொரு இனத்தை வெறுப்பதற்கான விதைகளைத் தூவுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளில் தொடக்க காலங்களில் மவுனமாக இருந்ததால்தான் தமிழ் முஸ்லிம் முரண் என்றும் அணைக்கமுடியாதபடி கொளுந்துவிட்டு எரிந்துமிருக்கின்றன.  உண்மையில் இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் இருந்திருந்தால் அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு தமிழர்கள் வெளியேறியாக வேண்டும். அதை நாம் உறுதியான குரலில் வலியுறுத்தி போராடும் முஸ்லிம்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். அதேபோன்று இன்று வன்னிக்குள் 'தான்தோன்றீஸ்வரங்களாய்' முளைத்தெழும் விகாரைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பவேண்டும்.  சிலவருடங்களுக்கு முன் திருக்கோணமலை சந்தைக்கருகில் தோன்றிய புத்தர் சிலை பற்றிய சர்ச்சைகளும் நமக்கு நினைவுவருகிறதல்லவா? இவ்வாறான விடயங்கள் பாதிக்கப்படுபவர்களின் மனங்களில் தங்கிவிட பிறகு ஏதோ ஒருவேளையில் ஏதோ ஒருகாரணத்தால் தூண்டிவிடப்பட்டு என்றுமே தணிக்க முடியாத வன்மமாய் மாறிவிடுகின்றது.

3.
இனி மீண்டும் நாவலுக்குள் வருகின்றேன். இந்த நாவலை முக்கிய நாவலாய் முன்னிறுத்தவர்கள் எதனால் இந்தநாவலைக் கூறுகின்றார்கள் என்பதுதான் தெளிவாகத் தெரியவில்லை. என்னளவில் இந்த நாவலை முன்னிறுத்தினால் ஏன் தமிழ்மகள் எழுதிய 'இனி வானம் வெளிச்சிரும்' நாவலை முன்னிறுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பவேண்டியிருக்கும். வன்னிமக்களின் பேச்சுவழக்கில், தன் பிள்ளைகளை எல்லாம் போராட்டத்திற்குக் காவுகொடுத்துவிட்ட பெண்மணியின் கதை மட்டுமின்றி. திருமணத்தின்பின் கணவன் எங்கையோ ஓடிவிட தான் மட்டுமே தனித்திருந்து பிள்ளைகளை வளர்த்த உறுதிமிகு பெண்ணின் கதை. அதை வாசிக்கும்போது ஒருவர் இந்தளவிற்கு துன்பப்படமுடியுமா என்ற நிலைக்கு உங்களைத் தள்ளும். மேலும் இந்நாவல் போராட்டக்களத்தில் நின்ற பெண்ணால்தான் எழுதப்பட்டிருக்கின்றது. ஆக, அந்த நாவலை நாம் அதிகம் கவனிக்காது விட்டதற்கு அதன் பிரதி கிடைப்பது எளிதானதல்ல மட்டும் காரணம், நமக்கான அரசியல் சார்புகளும் ஒரு காரணமாக இருந்தது என்பதை மனந்திறந்து பேசியாக வேண்டும். 'இனி வானம் வெளிச்சிரும்' எப்படி இயற்கைவளங்களோடு மகிழ்ச்சியான வாழ்விருந்த வன்னியில் போர்மேகங்கள் சூழ்ந்து பதற்றம் படர்கிறது வரை காட்சிப்படுத்தியிருக்கின்றது மட்டுமின்றி ஏன் போராடும் நிலை ஒருதலைமுறைக்கு வேறுவழியில்லாது திணிக்கப்பட்டது என்பது பற்றியும் பேசியிருக்கின்றது.

இப்போது கசகறணம் நாவல் என் வாசிப்பில் ஒரு முக்கிய நாவலாக இல்லை என்பதைக் கூறவே விரும்புகின்றேன். அது சில தரவுகளைப் பேசுவதால்/ பெண்கள் முக்கிய பாத்திரங்களாய் இருப்பதால் அது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் என்பதைத் தவிர அது 'வராது வந்த மாமணியே' போல கொண்டாட வேண்டிய நாவல்ல என்பதே என் வாசிப்பின் துணிபு. ஒரு நாவல் முடியும்போது அது பல்வேறு கேள்விகளை எழுப்பவேண்டும். ஆனால் கசகறணம் நடந்த சம்பவங்களின் ஒரு தொகுப்பாக மட்டும் தேங்கி விடுகின்றது (அண்மையில் வெளிவந்த அரசியல் கலந்த முக்கிய (குறு)நாவலென மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' ஐ தொடர்ந்து முன்வைக்க எனக்கு எவ்விதத் தயக்கங்களுமில்லை ). ஒரு கட்டுரைக்குத்தான் தரவுகளைப் பதிவு செய்தல் அவசியம், நாவலுக்கு அல்ல. அதுவும் முக்கியமான ஈழத்தமிழராய் நமக்கு அரசியல் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும்போது அதை நேரடியாகச் சொல்வதால் மட்டும் நாவல் வெற்றி பெறமுடியுமா எனவும் யோசிக்கவேண்டும். உதாரணத்திற்கு இந்நாவலில் பெத்தா எவ்வளவோ இழப்புக்களைச் சந்திக்கின்றார். ஆனால் அவரடையும் இழப்புக்கள் வாசிக்கும் எமக்கு எந்தளவிற்கு கடத்தப்படுகின்றதென்றால் என்னளவில் அதை ஒரு செய்தியாக வாசித்துக் கடந்துவிடும்படியாகவே இந்நாவலில் எழுதப்பட்டிருக்கின்றதென்பதைக் குறிப்பிட விழைகிறேன்.

இவ்வாறு கசகறணம் முக்கியமான ஒரு நாவல்ல எனக் கூறுவதால் எனது கருத்து கசகறணம் குறித்து ஷோபாசக்தி வல்லினத்தில் கூறிய பதிலைப் போன்றதல்ல என்பதையும் -எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தை எண்ணி- முற்கூட்டியே பதிவு செய்கின்றேன். எனவே ஒருவர் கசகறணம் நான் மேலே சுட்டிக்காட்டியதை விடவேறுவகையில் முக்கியமானதெனக் குறிப்பிட்டு விரிவாக எழுதுவாராயின் அதை வாசிக்க விருப்பமாகவே இருக்கின்றேன். சிலவேளை அந்தப்பதிவு கசகறணம் குறித்த என் பார்வையை மாற்றக்கூடியதாகக் கூட இருக்கலாம்.ஆனால் எல்லோரும் நாவலுக்கு வெளியே நின்று கருத்துக்களை உதிர்த்துகொண்டிருக்கின்றார்களே தவிர, ஏன் நாவல் முக்கியமானது என விரிவாக எழுதவில்லை என்பதுதான் சோகம்.

Dec 04, 2011